அனபெல் சேதுபதி - விமர்சனம்

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (11:14 IST)
நடிகர்கள்: விஜய் சேதுபதி, டாப்சி பன்னு, ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், யோகி பாபு, சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி, ஜெகபதிபாபு, ராஜந்திரபிரசாத்; இசை: கிருஷ்ண கிஷோர்; ஒளிப்பதிவு: ஜார்ஜ் கௌதம்; இயக்கம்: தீபக் சுந்தர்ராஜன்.
 
பேயையும் நகைச்சுவையையும் கலந்து Horror - Comedy என்ற பாணியில் வெளிவந்த பல திரைப்படங்கள் தமிழில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அந்த பாணியில் வெளிவந்திருக்கும் ஒரு படம்தான் 'அனபெல் சேதுபதி'.
இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு பௌர்ணமி தினத்தன்று யார் தங்கினாலும் இறந்து, அவர்களும் ஆவியாகிவிடுவார்கள். அந்த அரண்மனையில் கதாநாயகியும் அவளது குடும்பமும் வந்து தங்குகிறார்கள். அங்கே வசிக்கும் பேய்கள் ஏன் வெளியேற முடியவில்லை, அந்த அரண்மனையின் பின்னால் உள்ள மர்மம் என்ன என்பதுதான் 'அனபெல் சேதுபதி' படத்தின் கதை.
 
படம் சுவாரஸ்யமாகவே துவங்குகிறது. பேய்களும் அறிமுகமாகின்றன. பேயாக வருபவர்களில் பலர் நகைச்சுவை நட்சத்திரங்கள் என்பதால், ஒரு மிகப் பெரிய நகைச்சுவை கலாட்டா நிச்சயம் என்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால், அதற்குப் பிறகுதான் பேயடித்தால் எப்படியிருக்கும் என்பது பார்வையாளர்களுக்குத் தெரிகிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு படம் எந்தத் திசையில் செல்கிறது என்பதே தெரியவில்லை.
படம் ஆரம்பித்து சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு நகைச்சுவை என்ற பெயரில் வரும் காட்சிகளைப் பார்த்தால் பேய்களுக்கே அடுக்காது. இதுபோக, கதாநாயகியின் குடும்ப உறுப்பினர்களாக வரும் நகைச்சுவைப் பாத்திரங்கள் செய்யும் காமெடிகள் எல்லாம், பார்வையாளர்களுக்கு சித்ரவதை.
 
படத்தில் வரும் வில்லனும் அந்த வில்லன் செய்யும் சதிச் செயல்களும் சுமார் 70 ஆண்டுகள் பழமையானவை. கதாநாயகன் கட்டியிருப்பதைப்போல தன்னால் அரண்மனையை வடிவமைக்க முடியவில்லையே என்ற துக்கத்தில்தான் இத்தனை சதிகளையும் கொலைகளையும் செய்கிறார் வில்லனார். அதற்குப் பதிலாக, ஒரு ஆர்க்கிடெக்ட்டை அழைத்துவந்திருந்தால், வில்லனுக்கு கொலை செய்யும் வேலை மிஞ்சியிருக்கும். பேய்களும் இத்தனை வருடம் உள்ளே திரிந்திருக்க வேண்டியிருக்காது.
 
படத்தின் பிற்பாதியில் விஜய் சேதுபதி அறிமுகமாகிறார். எல்லாப் படங்களைப் போலவும் இந்தப் படத்திலும் அலட்சியமாகவே வந்துபோகிறார். சில காட்சிகளில் மட்டுமே சற்று பரவாயில்லை ரகம். யோகி பாபு இருந்தும்கூட படத்தில் எங்கேயும் நகைச்சுவை எடுபடவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்