தமிழ் மாதத்தில் ஆடிக்குதான் சிறப்புகள் அதிகம்

Webdunia
சனி, 16 ஜூலை 2016 (15:30 IST)
தமிழ் மாதத்தின்படி ஆண்டின் நான்காவது மாதம் ஆடி ஆகும். நம் முன்னோர்கள் ஆடிப்பிறப்பைச் சிறப்பாகக் கொண்டாடும் வழக்கம் உண்டு. தற்காலத்தில் இவ்வழக்கம் அருகிவிட்டது.


 
 
ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.
 
இம்மாதத்தில் வரும் ஆடி அமாவாசை மற்றும் ஆறுகளில் புனல் பொங்கிவந்து ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளான ஆடி மாத பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு ஆகியவை விஷேசம்.
 
ஆடிப் பிறப்பு
 
ஆடி மாதம் பிறப்பதற்கு முன் நாளே புது மாப்பிள்ளை, பெண்ணையும் பிரித்து வைப்பார்கள். ஏனெனில் அம்மாதம் முழுவதும் சில்லென்று காற்று வீசுவதால், அம்மதத்தில் சேரும் தம்பதியர்களுக்கு சித்திரை மாதத்தில் குழந்தை பிறந்தால், கோடை வெயிலின் தாக்கத்திற்கு ஆளாகும் அதனால்தான் அம்மாதம் முழுவதும் மணமான புதுப் பெண், தன் தாய் வீட்டிலேயே தங்கிவிடுகிறாள். ஆடி மாதம் பெண்கள் மாதம் ஆதலால், பெண் தெய்வங்களைக் கொண்டாடி மகிழ்வர்.
 
ஆடி மாதப் பண்டிகைகள்
 
ஆடி மாத வந்துவிட்டாலே அம்மன் கோயில்களில் தனிக்கவனம் செலுத்தப்படும். ஆடி மாதத்தில் பல முக்கியமான விழாக்கள் உள்ளன. ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் ஆகியவை ஆடி மாததிற்குரிய பண்டிகைகள் ஆகும்.
 
ஆடி அமாவாசை
 
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிக முக்கியமானதாகும். அன்று நதிகள், கடலில் புனித நீராடி முன்னோர்களை வணங்கி திதி கொடுப்பதும், அன்னதானம், வஸ்திர தானம் செய்வதும் இம்மைக்கும், மறுமைக்கும் புண்ணிய பலன்களை சேர்க்கும் என்பது ஐதீகம். தங்களது வீட்டிகளில் மறைந்த முன்னோர்களை வழிப்படுவதோடு, அவர்களுக்கு திதி கொடுப்பது அன்றைய நாளில் மிகவும் பலன் தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
 
அம்மனுக்கு உகந்த ஆடி
 
ஆடி மாதம் பிறந்தால் அனைத்து பண்டிகளையும் அழைத்து கொண்டு வரும் என்று கூறுவார்கள். அம்பிகைக்கு உகந்த மாதம். மாரியம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் காலம். ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு கிழமைகள் இணைந்தால் அந்நாள் வழிபாட்டுக்கு மிகவும் உகந்தது. மழைக்காலம் தொடங்குவதும் இப்பொழுதுதான். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
 
ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்று பொங்கல் வைத்து, ஞாயிற்று கிழமை கூழ் ஊற்றுவதுண்டு. அம்மாதத்தில் வரும் 5 வெள்ளிக் கிழமைகளிலும் மிகவும் சிறப்பாக கொண்டாடி வழிப்படுவர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்