காட்டிற்குச் சென்றதன் மூலம் ராமாவதாரத்தின் நோக்கம் நிறைவேறியதாகச் சொல்லப்பட்டாலும், கைகேயியின் செயலை வைத்து மாற்றாந்தாய்களை இதுவரை நாம் விமர்சித்து வருகிறோம். ஆனால் கைகேயியின் செயலுக்கு காரணம், மாந்தாரை என்ற கூனி காரணம் அல்ல. இஷ்வாகு குலத்தின் மேல் கைகேயிக்கு இருந்த பற்றும், ராமன் மீதான தாய்ப்பாசமே காரணம் என்கிறது ராஜஸ்தான் மாநிலத்தில் வழங்கப்பட்டு வரும் ஒரு ராமாயணம்.
கண்ணாடியில் நரைமுடி தெரிந்ததால், உடனடியாக ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்துவிட வேண்டும் என்று தசரதன் துடித்தார். மறுநாளே சுபமுகூர்த்த தினம் என்பதால், பட்டாபிஷேகத்திற்கு நாள் குறித்தும் விடுகிறார். அதன் பிறகே இந்தத் தகவல் அரண்மனை ஜோதிடருக்குத் தெரிய வருகிறது.
அரச குலத்தவர்களின் ஜாதகங்கள் அவருக்கு அத்துப்படியானதால் அதிர்ச்சியடைகிறார். மறுநாள் நல்ல நாள்தான் என்றாலும், ராமனுக்கு பட்டாபிஷேகத்திற்கு உகந்த நாள் அல்ல. வயோதிகத்தை எட்டிய தசரதனின் மரணம் முடிவானதுதான். ஆனால் ராமன் பட்டாபிஷேகம் ஏற்பதற்குரிய நாள் இது அல்ல. மீறி ஏற்றால் ராமனுக்கு அபசகுனமாகி விடும். அத்துடன் இஷ்வாகு வம்சமே நாசமாகிவிடும். இந்த செய்தி தெரிந்ததால், ஜோதிடர் அதிர்ச்சி அடைகிறார்.