யோகாசனம் செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்ன...?

Webdunia
அதிகாலை வெறும் வயிற்றிலும், மாலை நேரங்களில் உணவு உண்ட பின் நான்கு மணி நேரம் கழித்தும் ஆசனங்களைச் செய்யலாம். அதிகாலை செய்வதே சிறப்பாகும். 


யோகாசன பயிற்சியில் தியானம், மூச்சுப்பயற்சி, ஆசனம் இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளது. ஆகவே, சில நிமிடங்கள் தியானம், பிறகு  பிராணாயாமம், அதன் பிறகு ஆசனங்கள் செய்வது நல்லது.
 
யோகாசனம், தியானம், மூச்சுப்பயற்சி இவைகளை எப்போதும் கிழக்கு முகம் பார்த்தோ, அல்லது வடக்கு முகம் பார்த்தோ பயிற்சி செய்தல் நல்லது. நேரமில்லாமல் வருந்துபவர்கள், காலை நேரத்தில் தியானம், மூச்சுப்பயற்சி செய்துவிட்டு, மாலை நேரத்தில் யோகாசனப் பயிற்சியையும் செய்யலாம்.
 
பருத்தி துணியாலான உடைகளை அணிவது நல்லது. உடலை மிகவும் இறுக்கி, ஆசனங்கள் செய்யும் பொழுது அழுத்தி வலிப்பதாக இருக்கக்கூடாது. அதுபோலவே உள்ளாடைகள் மிகவும் தளர்வாக இருக்கக்கூடாது.
 
நீண்ட நேரம் வெயிலில் அலைந்தாலும், உடல் களைத்திருந்தாலும் இரவில் சரிவர  தூக்கம் இல்லாமல் இருக்கும் நேரங்களில் யோகாசன உடற்பயிற்சிகளை தவிர்த்தல் நல்லது. ஏனெனில் இந்த நேரத்தில் யோகாசனப் பயிற்சி செய்தால்  மேலும் உடல் களைப்பும், உடல் வெப்பமும் அதிகரிக்கும்.
 
யோகாசனம் செய்த பின்பு கட்டாயம் சவாசனம் என்ற ஓய்வு ஆசனத்தில் குறைந்தது 10 நிமிடங்களாவது இருக்க வேண்டும். அப்பொழுது தான் உடலின் இரத்த  ஓட்டம் சரியான நிலைக்கு வரும். யோகப் பயிற்சியை முடித்துக் கொண்டு வியர்வை அடங்கிய பின்னால்தான் குளிக்க வேண்டும். யோகாசனப் பயிற்சிக்குப்  பின்பு 15 நிமிடங்கள் கழித்து எளிய ஆகாரங்களையோ, பழச்சாறு, அல்லது உணவு உட்கொள்ளலாம்,
 
யோகாசனப் பயிற்சி செய்பவர்கள் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ அவசியம் எண்ணெய் தேய்த்து 10 நிமிடங்களுக்குள் தலை  தேய்த்துக்குளித்தல் நல்லது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்