குறைந்த விலையில் சொர்க்கம்! இந்தியாவில் ஃபாரீன்! – கவனிக்கப்படாத 10 சுற்றுலா தளங்கள்!
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (14:05 IST)
இந்தியாவில் ஏகப்பட்ட சுற்றுலா பகுதிகள் உள்ள நிலையில் குறைந்த செலவே ஆகும், அனால் மக்களால் அதிகம் கவனிக்கப்படாத சுற்றுலா தளங்கள் குறித்து பார்ப்போம்.
தற்போதைய காலத்தில் சுற்றுலா செல்வது பலருக்கும் விருப்பமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அதிகமான மக்கள் சுற்றுலா செல்லும் கோவா, லடாக் போன்ற பகுதிகளுக்கே மற்றவர்களும் அதிகம் செல்வதால் செலவு அதிகமாவதுடன், பயணிகள் நெரிசல் மிக்க பகுதியாகவும் சுற்றுலா தளங்கள் ஆகிவிடுகின்றன.
அதிக செலவு இல்லாமல் குறைந்த செலவில், கூட்ட நெரிசல் இல்லாமல் அழகிய பகுதிகளை சுற்றி பார்க்க ஆசையா? உங்களுக்காக குறைந்த விலையில், சுற்றுலாவாசிகள் கண்களில் அதிகம் படாத சில சுற்றுலா பகுதிகள் இதோ..!
ஒசியன் (Osian)
ராஜஸ்தானில் அமைந்துள்ள இந்த ஒசியன் பகுதி, ராஜஸ்தானின் கஜுரஹோ என்று அழைக்கப்படுகிறது. கஜுரஹோ சிற்பங்களுக்கு நிகரான பௌத்த, ஜைன மத சிற்பங்களை, கோவில்களின் கட்டிடகலைகளை இங்கே காணலாம்.
இந்த பகுதியில் நடக்கும் தொலைவிலேயே 8 முதல் 11ம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தை சேர்ந்த 18க்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. மேலும் குறைந்த விலையில் ஒட்டக சவாரி செய்யவும் சரியான இடம் இது.
வயநாடு (Wayanad)
கேரளாவில் அமைந்துள்ள வயநாடு மலைகளும், அழகான இயற்கை காட்சிகளும் நிறைந்த இடம். இங்குள்ள காடுகள் 3000 ஆண்டுகள் பழமையானவை. வயநாடின் உள்பகுதிகளில் விலை குறைவான தங்கும் விடுதிகள், சுற்றி பார்க்க அழகான இயற்கை காட்சிகள் பல உண்டு.
குளிர்கால வாசஸ்தலமான வயநாடு தேனிலவு செல்லும் திருமண ஜோடிகளும், குடும்பமாக செல்பவர்களும் சில நாட்கள் வரை தங்கி இயற்கையை ரசிக்க அழகான இடமாகும்.
வால்பாறை (Vaalparai)
தமிழ்நாட்டில் உள்ள வால்பாறை பச்சைபசேல் இயற்கை மலைவாச ஸ்தலமாகும். நீர்வீழ்ச்சிகள், ஏரி, அணை, படகு சவாரி, மலையேற்றம் என அனைத்தும் செய்வதற்கான அழகிய சூழல் கொண்ட இந்த பகுதி ஆனைமலை அருகே அமைந்துள்ளது.
அழகான தேயிலை தோட்டங்கள், இயற்கை காட்சிகளை ரசித்தபடி சில நாட்களுக்கு குறைந்த விலையிலேயே தங்கி மகிழ சரியான இடம் வால்பாறை
லெப்சாஜகட் (Lepchajagat)
மேற்கு வங்கத்தில் உள்ள லெப்சாஜகட் ஒரு குட்டி டார்ஜிலிங் என்றே சொல்லலாம். அதிகம் சுற்றுலா பயணிகளால் கண்டுக்கொள்ளப்படாத இந்த பகுதி டார்ஜிலிங்கில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள அழகான குட்டி கிராமம் ஆகும்.
டார்ஜிலிங் அளவிற்கு போக்குவரத்து, சுற்றுலாவாசிகள் நெரிசல் இல்லாத அழகான இந்த கிராமப்பகுதியில் தங்க டார்ஜிலிங்கை விட குறைவாகவே செலவாகும். தேனிலவு தம்பதிகள் சுற்றி பார்க்கவும், தங்கவும் வசதியான இடம் இந்த லெப்சாஜகட். இங்குள்ள ஓக், பைன் மரக்காடுகள் சுற்றுலா செல்பவர்கள் கண்டிப்பாக சுற்றி பார்க்க வேண்டிய பகுதிகள்.
ஹஃப்லாங் (Haflong)
அசாமில் உள்ள பெரும்பாலானோருக்கு தெரியாத இயற்கையின் அதிசயம் ஹஃப்லாங். மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த பிரதேசம் கேம்ப் ஃபயர் விரும்பிகளின் சொர்க்கம். பெரிய பெரிய சிகரங்கள், சமவெளிகள், அருவிகள், ஏரிகளுடன் பச்சை பசேலென பூத்து குலுங்கும் அழகை காண கண் கோடி வேண்டும்.
இயற்கை அழகை ஆகாயத்திலிருந்து தரிசிக்க பாரா க்ளைடிங்கும் உண்டு. சுற்றி பார்க்க ட்ரெக்கிங் வசதிகளும் குறைந்த விலையில் உள்ளது.
லொனார் க்ராட்டர் ஏரி (Lonar Crater Lake)
மகாராஷ்டிராவில் உள்ள லொனார் க்ராட்டர் ஏரி அதிகமான சுற்றுலா பயணிகளுக்கு தெரியாத ஒரு சுற்றுலா தளம் ஆகும். 54 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பெரிய விண்கல் ஒன்று மோதியதில் உருவானதுதான் லொனார் க்ராட்டர் ஏரி.
ஏரியை சுற்றிலும் அடர்ந்த காடும், மலைகளும் நீண்டு செல்கின்றன. இயற்கை, பறவை ஆர்வலர்கள் நெரிசலின்றி சுற்றி பார்க்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் அருமையானதொரு இடம் இது
கஜ்ஜார் (Khajjiar)
இமாச்சல பிரதேசத்தில் உள்ள பயணிகள் நெரிசலற்ற அழகான இயற்கை பகுதி கஜ்ஜார். சிம்லா, மணாலி, குஃப்ரி பகுதிகளுக்கு நிகரான இயற்கை அழகை கொண்ட மலைகள் சூழ்ந்த அழகான பகுதி இந்த கஜ்ஜார்.
மலைகளின் மீது ரப்பர் பந்துகளில் உருண்டு செல்லும் ஸோர்பிங் விளையாட்டுகள், குதிரை சவாரி என சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பல விளையாட்டுகளும் கஜ்ஜாரில் உண்டு
ஸிரோ வேலி (Ziro Valley)
அருணாச்சல பிரதேச மலைகளுக்கு நடுவே அமைந்த அழகிய சமவெளி பகுதிதான் இந்த ஸிரோ வேலி. அழகிய சில்லென்ற நீரோடைகள் சூழ்ந்த இந்த சமவெளியிலிருந்து காலை மலைகளின் மீது அழகிய சூரிய உதயத்தையும், மேகங்கள் சூழ்ந்த மலைப்பகுதிகளையும் ரசிக்கலாம்
ஸிரோ வேலியில் நடைபெறும் இசை விழா மிகவும் பிரபலமானது. பழங்குடி மக்களின் நடனம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றோடு, இயற்கையையும் ரசிக்கும் அற்புதமான வாய்ப்பு ஸிரோ வேலியில் கிடைக்கும்.
கெய்புல் லம்ஜா (Keibul Lamjao)
மணிப்பூரில் உள்ள கெய்புல் லம்ஜா உலகத்திலேயே உள்ள ஒரே ஒரு மிதக்கும் தேசிய பூங்கா ஆகும். இந்த பூங்காவில் உள்ள லொக்டாக் ஏரியில் மிதமிஞ்சி வளர்ந்த இயற்கை தாவரங்கள் ஒன்றோடொன்று பிணைந்து மிதக்கும் பாதையாக உருவாகி இப்படியான அதிசயத்தை தோற்றுவித்துள்ளன.
மேலும் உலகில் வேறு எங்கும் காணப்படாத அதிசயமான அழியும் நிலையில் உள்ள மான்களான சங்காய் மான்கள் இந்த பூங்காவில்தான் அதிகம் வசிக்கின்றன.