இன்று உலக ரத்த தான தினம்! – ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?

செவ்வாய், 14 ஜூன் 2022 (11:13 IST)
உலகம் முழுவதும் மருத்துவதுறையில் பலர் உயிர் பிழைக்க காரணமாக இருக்கும் ரத்த தானத்தை ஊக்குவிக்கும் விதமாக இன்று உலக ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது.

உலக அளவில் மருத்துவத்துறை பல்வேறு அரிய கண்டுபிடிப்புகள் நடந்து வருகின்றன, அவற்றில் முக்கியமானதாக இருப்பது ரத்த தானம். நமது ரத்தத்தை ஒருவருக்கு வழங்கமுடியும் என்பதை மருத்துவ உலகம் கண்டறியும் முன்னர் விபத்துகளால், அல்லது அறுவை சிகிச்சை செய்ய இயலாமல் பலர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் ரத்த தானம் என்ற முறை கண்டறியப்பட்ட பிறகு உலகம் முழுவதும் பல்வேறு உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஜூன் 14ல் உலக ரத்த தான தினம் கொண்டாடப்படும் நிலையில் அதுகுறித்து அரிய தகவல்களை அறிந்து கொள்வோம்.

”எல்லார் ரத்தமும் சிவப்பாதானே இருக்கு” என படங்களில் பஞ்ச் வசனங்கள் பேசினாலும், மனிதனின் ரத்தம் பல்வேறு வகைகளாக உள்ளது என்பதை முதன்முதலில் கண்டறிந்தவர் ஆஸ்திரிய உயிரியல் விஞ்ஞானியான கார்ல் லாண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner) தான். ரத்தம் குறித்து ஆய்வு செய்த இவர் மனித ரத்தம் சில வகைகளாக இருப்பதையும், ஒருவகை ரத்தத்தை இன்னொருவருக்கு செலுத்த முடியாது. ஆனால் ஒரே மாதிரி வகை ரத்தத்தை கொண்டுள்ளவர்கள் ரத்தத்தை பகிர்ந்து கொள்ள முடியும் என்பதை கண்டுபிடித்தார்.

மருத்துவ உலகில் பெரும் சாதனையாக பார்க்கப்பட்ட இந்த கண்டுபிடிப்பிற்கு 1930ம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்பை செய்த கார்ல் லாண்ட்ஸ்டெய்னரின் பிறந்தநாளான ஜூன் 14ம் தேதிதான் உலக ரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த ரத்த தான தினத்தில் உலகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் தன்னார்வல அமைப்புகள் மக்களிடம் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், ரத்த தானம் அளிக்க ஊக்குவித்தும் வருகின்றனர். சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மக்களிடம் பெறப்படும் ரத்தம் விபத்து, சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பயன்பாடுகளுக்கு உதவுகிறது. இந்த ரத்த தான தினத்தில் சக உயிர்களை காக்க ரத்த தானம் அளிப்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்