கனடாவில் நார்மன் மற்றும் மேரி க்ராம்ஸ் என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு 1951ல் திருமணம் நடந்தது. நார்மன் தோட்டக்கலையில் ஆர்வம் உள்ளவர். தனது வீட்டுக்கு பின்புறம் பெரிய காய்கறி தோட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தார். மேரியும் அவரோடு சேர்ந்து பணிபுரிவது வழக்கம். 2006ம் ஆண்டு ஒருநாள் மேரி தோட்டப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போதுதான் கவனித்தார் அவரது திருமண மோதிரத்தை கானவில்லை. தோட்டத்திற்கு சென்று நீண்ட நேரம் தேடியும் மோதிரம் அகப்படவில்லை. இது தெரிந்தால் தன் கணவர் வருத்தப்படுவார் என்பதால் அதேபோல வேறு ஒரு மோதிரத்தை வாங்கி போட்டுக் கொண்டு சமாளித்தார். இது பற்றி தனது மகனிடம் கூட அவர் சொல்லவில்லை.
வருடங்கள் உருண்டோடியது. மகனுக்கு திருமணமாகிவிட்டதால் அந்த பூர்வீக வீட்டில் மகனை வசிக்க சொல்லிவிட்டு நார்மன் தம்பதியினர் வேறு ஊருக்கு சென்றுவிட்டனர். ஆனாலும் நார்மனின் மகன் அந்த தோட்டத்தை நல்லபடியாக பாதுகாத்து வந்துள்ளார். ஒருநாள் மேரியின் மருமகள் கொலீன் டாலி தோட்டத்தில் காய்கறிகளை பறித்து கொண்டிருக்கிறார். அப்போது பிடுங்கிய கேரட்டுகளில் ஒன்று மட்டும் வித்தியாசமாக இருப்பதை கவனித்து அதை எடுத்து பார்த்திருக்கிறார். அதில் ஒரு மோதிரம் மாட்டியிருந்திருக்கிறது.
உடனே அதை எடுத்து சென்று தனது கணவரிடம் காட்டியிருக்கிறார். அதை பார்த்த அவளது கணவர் இது தன் தாய் மேரியினுடையது என்று கண்டுகொண்டார். மேரிக்கு இதுகுறித்து தெரிவித்த பிறகுதான் மோதிரம் காணாமல் போனதை மேரி வெளியிட்டார். தற்போது நார்மன் இறந்து 6 வருடங்களாகிவிட்டது. அவர் இல்லாவிட்டாலும் அவர் அணிவித்த மோதிரம் 13 வருடங்கள் கழித்து கிடைத்திருப்பது மேரிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் தற்செயலான அதே நேரத்தில் அதிசயமானதாகவும் இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.