சீனாவில் 118 குழந்தைகளை தத்தெடுத்த பெண்ணுக்கு சிறை

வியாழன், 25 ஜூலை 2019 (18:19 IST)
118 குழந்தைகளை தத்தெடுத்ததற்காக “கொடையாளர்” என்று புகழப்பட்ட 54 வயதான சீன பெண்ணொருவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 
மிரட்டி பணம் பறித்தல், மோசடி, ஏமாற்றுதல் மற்றும் சமூக ஒழுங்கை சீர்குலைத்தல் போன்ற குற்றங்களை லி யான்சியா புரிந்துள்ளதாக ஹெபெய் மாகாணத்தின் வு‘யன் நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
 
"அன்பு தாய்" என்று புனைப்பெயர் சூட்டப்பட்ட அனாதை இல்லத்தின் முன்னாள் உரிமையாளரான இவருக்கு 2.67 மில்லியன் யுவான் (சீன நாணயம்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
 
இவரது துணைவர் உள்பட 15 சகாக்களுக்கும் தண்டனை வழக்கப்பட்டுள்ளது.
 
அனாதை இல்லத்தின் செல்வாக்கை லி லிஜூயன் என்றும் அறியப்படும் லி யான்சியா தவறாக பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
 
"பொருளாதார நன்மைகளை பெறுவதற்காக கும்பலோடு பிற மோசடி குற்றங்களையும் லி யான்சியா செய்துள்ளார்" என்று வு‘யன் நகர மக்கள் நீதிமன்றம் வெய்போ நுண் வலைப்பூவில் பதிவிட்டுள்ளது.
 
சமூக ஒழுங்கை சீர்குலைத்தல், மிரட்டி பணம் பறித்தல், மோசடி மற்றும் திட்டமிட்டு காயப்படுத்தியது போன்ற குற்றங்களுக்காக இவரது துணைவர் சியு ச்சி-க்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு 12.5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1.2 மில்லியன் யுவான் அபராதமும் வழங்கப்பட்டுள்ளது.
 
பிற 14 சாகாக்கள் நான்கு ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுள்ளனர்.
 
ஹெபெய் மாகாணத்தின் அவரது சொந்த நகரான வு'யனில் பல டஜன் குழந்தைகளை தத்தெடுக்கும் உண்மையை ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த 2006ம் ஆண்டு லி யான்சியா புகழின் உச்சிக்கு சென்றார்.
 
திருமணமாகியிருந்த லி யான்சியா விவாகரத்து பெற்றுவிட்டதாக ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
 
அவரது முன்னாள் கணவர் மகனை கடத்தல்காரர்களிடம் ஏழாயிரம் யுவான் பணத்திற்கு விற்றுவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார். எப்படியோ தனது மகனை திரும்பபெற்று விட்டாதாக கூறிய அவர், அதுமுதல் பிற குழந்தைகளுக்கு உதவ முடிவு செய்ததாக தெரிவித்தார்.
 
பல ஆண்டுகளில் அவர் கணிசமான செல்வத்தை திரட்டியதோடு, ஹெபெய் மாகாணத்தில் பணக்கார பெண்களில் ஒருவரானார். 1996ம் ஆண்டு இரும்பு சுரங்க நிறுவனம் ஒன்றை அவர் வாங்கினார்.
 
டஜன்கணக்கான குழந்தைகளை தத்தெடுத்த இவர், அனாதை இல்லம் ஒன்றை திறந்து அதற்கு "அன்பு கிராமம்" என்று பெயரிட்டார்.
 
2017ம் ஆண்டு அவரது பராமரிப்பிலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 118-ஆக அதிகரித்தது,
 
அந்த ஆண்டுதான் இவரது சந்தேகத்திற்குரிய நடத்தைகள் பற்றி பொது மக்களிடம் இருந்து அரசுக்கு தகவல் கிடைத்தது.
 
2018ம் ஆண்டு அவரது வங்கிக்கணக்கில் 20 மில்லியன் யுவானும், 20 ஆயிரம் டாலர்களும் இருப்பதை காவல்துறை கண்டறிந்தது.
 
2011ம் ஆண்டு தொடங்கி இவர் சட்டவிரோத செயல்பாடுகளை செய்து வருவதையும் காவல்துறை கண்டுபிடித்தது.
 
தத்தெடுத்த சில குழந்தைகளை கொண்டு கட்டுமான தளங்களில் பணிகளை நடைபெறுவதை தடுத்து, தனது ஆதாயத்திற்கு பயன்படுத்த இவர் தொடங்கியுள்ளார். பின்னர் அந்த கட்டுமான நிறுவனங்களை லி யான்சியா மிரட்டியுள்ளார்.
 
"அன்பு கிராமம்" கட்டியமைப்பதை சாக்குப்போக்காக கொண்டு, இவர் பண ஆதாயம் பார்த்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
 
கடந்த மே மாதம் குற்றவியல் சட்டப்படி அவர் கைது செய்யப்பட்டபோது, 74 சிறார்கள் இவரது பராமரிப்பில் இருந்தனர். இவர்கள் அனைவரும் அரசு மற்றும் பள்ளிகளுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளனர்.
 
"பசுந்தோல் போர்த்திய புலி இவர் "(லி யான்சியா) என்று பலரும் சமூக ஊடகங்களில் இவரது செயல்பாடுகளை கண்டித்துள்ளனர்.
 
"கேவலம். எனது மாமா இவரது அனாதை இல்லத்திற்கு முன்பு நன்கொடை வழங்கியுள்ளார்" என்று ஒருவர் வெய்போவில் பதிவிட்டுள்ளார்.
 
"அன்பு தாய் என்று ஒருமுறை இவரை அழைத்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ள இன்னொருவர், "அதனை திரும்ப பெற விரும்புகிறேன். அவரிடம் அன்பு இல்லை. இந்த பெயருக்கு அவர் அருகதை இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்