காதலனின் மனைவிக்கு ஜீவனாம்சமாக ரூ.3.7 கோடி கொடுத்த பெண்.. அதன்பின் நிகழ்ந்த ட்விஸ்ட்..!

Mahendran

புதன், 24 செப்டம்பர் 2025 (13:22 IST)
சீனாவில்  ஒரு பெண் தொழிலதிபர் தான் காதலித்த இளைஞரை மணப்பதற்காக, அவரது மனைவிக்கு ₹3.7 கோடி கொடுத்து விவாகரத்து பெற வைத்துள்ளார். ஆனால், ஓராண்டுக்கு பிறகு, அந்த இளைஞர் தனக்கு ஏற்றவர் இல்லை என உணர்ந்து, தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
 
சீனாவின் சோங்குவிங் நகரில் வசிக்கும் ஒரு பெண் தொழிலதிபர், தன் நிறுவனத்தில் பணிபுரிந்த இளைஞர் மீது காதல் கொண்டார். இருவருக்கும் ஏற்கனவே திருமணமாகியிருந்தது. காதலுக்காக, தனது கணவரை பிரிய முடிவு செய்த அந்த பெண், தனது காதலனின் திருமண பந்தத்தை முறிக்க ஒரு வினோதமான முடிவை எடுத்தார். காதலனின் மனைவிக்கு ₹3.7 கோடியை ஜீவனாம்சம் மற்றும் அவரது குழந்தையின் பராமரிப்பு செலவுக்காக வழங்கினார். இதன் மூலம், அந்த இளைஞர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.
 
விவாகரத்து கிடைத்த பிறகு, அந்த பெண் தொழிலதிபர் தனது காதலனை திருமணம் செய்து கொண்டார். ஆனால், ஓராண்டு சேர்ந்து வாழ்ந்த பின்னர், அந்த இளைஞர் தனக்கு ஏற்றவர் இல்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார். இதனையடுத்து அந்த பெண், விவாகரத்துக்காக கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 
 
இந்த வழக்கை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அந்த பணத்தை ஜீவனாம்சம் மற்றும் குழந்தை பராமரிப்பு செலவுக்காக வழங்கியதை சுட்டிக்காட்டியது. மேலும், "ஒரு குடும்பத்தை உடைக்கப் பணத்தை கொடுத்துவிட்டு, இப்போது அதையே திரும்பக் கேட்பது முறையற்ற செயல்" என்று கூறி, முதல் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது.
 
இதன் மூலம், அந்த பணத்தை அவர் திரும்பப் பெற முடியாது என தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் அந்தப் பெண் தொழிலதிபருக்கு கடும் விமர்சனங்களையும், பண இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்