மனைவி தற்கொலை : கொடூர கணவனுக்கு சிறை...

Webdunia
சனி, 3 நவம்பர் 2018 (20:29 IST)
தன்னுடைய மனைவி தற்கொலை செய்வதை ஊக்குவித்த கணவருக்கு 10 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்துள்ள சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. இதுபோன்ற வழக்கு விசாரிக்கப்பட்டது உலகிலேயே இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
68 வயதாகும் கிரஹாம் மோரண்ட் என்ற அந்நபர் கடந்த 2014ஆம் ஆண்டு தனது மனைவி தற்கொலைக்கு முயன்றபோது அதற்கு உதவியதாக தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
தனது மனைவியின் ஆயுள் காப்பீட்டு பலன்களை பெறுவதற்காகவே கிரஹாம் இவ்வாறு செயல்பட்டதாக தனது தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.
 
ஜெனிஃபர் இறந்தால் அதன் மூலம் கிடைக்கும் சுமார் 1.4 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை பெறும் நோக்கத்தில் கிரஹாம் செயல்பட்டது தெரியவந்துள்ளது.
 
"1.4 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை பெறுவதற்காக உங்களது மனைவியை நீங்கள் மூளை சலவை செய்து தற்கொலைக்கு தூண்டியுள்ளீர்கள்" என்று வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பு வழங்கிய குயின்ஸ்லாந்து மாகாண நீதிமன்றத்தின் நீதிபதி பீட்டர் டேவிஸ் கூறினார்.
 
தனது கணவரின் செயல்பாட்டின் காரணமாக தற்கொலைக்கு முன்னரே ஜெனிஃபர் நாள்பட்ட வலி, மன அழுத்ததால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
 
ஒருவர் மற்றொருவருக்கு தற்கொலை செய்துகொள்வதற்கு ஆலோசனை வழங்கியதற்காக தண்டனை விதிக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல்முறை என்று அப்போது நீதிபதி டேவிஸ் கூறினார்.
 
தனது மீதான குற்றச்சாட்டுகளுக்கு கிரஹாம் மறுப்பு தெரிவித்தாலும், அவரது ஆலோசனை இன்றி ஜெனிஃபர் தற்கொலைக்கு செய்துகொண்டிருக்க மாட்டார் என்று நீதிமன்றம் நியமித்த குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் தேதி 56 வயதான ஜெனிஃபர் பெட்ரோல் ஜெனரேட்டருக்கு அருகில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அப்போது, அவருக்கு அருகிலிருந்த கடிதத்தில், "தயவுசெய்து என்னை உயிர்ப்பிக்காதீர்கள்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
ஜெனிஃபர் இறப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஜெனரேட்டரை கிரஹாம் தன்னுடைய மனைவியை கடைக்கு அழைத்துச்சென்று வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தன்னுடைய மனைவியிடம் அவர் இறந்தவுடன் கிடைக்கும் ஆயுள் காப்பீட்டு பணத்தை கொண்டு தான் மதக்குழுவை தொடங்கவுள்ளதாக கூறியதாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கிரஹாம் தான் செய்த குற்றத்திற்கு எவ்வித வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், "அவரது பலவீனத்தை பயன்படுத்தி நீங்கள் ஆதாயம் கண்டுள்ளீர்கள்" என்றும் நீதிபதி தனது தீர்ப்பின்போது மேலும் கூறினார்.
 
தனது மனைவி தற்கொலை செய்துகொள்வதற்காக ஆலோசனை வழங்கிய குற்றத்திற்காக 10 வருட சிறைத்தண்டனையையும், தற்கொலைக்கு உதவியதற்காக ஆறு வருட சிறைத்தண்டனையும் கிரஹாமுக்கு விதிக்கப்பட்டுள்ளது. இருவேறு சிறைத்தண்டனையும் ஒரே நேரத்தில் தொடங்குமென்றும், 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிணைக்கோரி கிரஹாம் விண்ணப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்