ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் யுபிஐ.. இந்திய சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

Siva

வெள்ளி, 17 ஜனவரி 2025 (09:23 IST)
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் இந்திய சுற்றுலா பயணிகள் இனி யுபிஐ வாயிலாக பணம் செலுத்திக் கொள்ளலாம் என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பகுதிக்கு இந்தியாவிலிருந்து சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை அவர்கள் ஷாப்பிங் செய்யும்போது ரொக்கம் அல்லது கிரெடிட் கார்டுகளை மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் போன் பே, கூகுள் பே, பீம் போன்ற யுபிஐ டிஜிட்டல் பணம் செலுத்தும் முறை அங்கு நடைமுறையில் இருக்கவில்லை. இந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் இந்தியர்கள் அங்கு யுபிஐ சேவையை பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, டியூட்டி ஃப்ரீ கடைகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுவதாகவும், படிப்படியாக சில்லறை கடைகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் பலன் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே நேபாளம், சிங்கப்பூர், இலங்கை, பிரான்ஸ், பூடான், மொரிசியஸ் ஆகிய நாடுகளில் யுபிஐ சேவை அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்