ஒரே வழக்கை, மதுரை, சென்னை உயர்நீதிமன்றங்கள் விசாரித்தது ஏன்? கரூர் நெரிசல் வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான விவகாரம் தொடர்பான மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு இவ்வழக்கை கையாண்ட விதம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
கரூர் சம்பவம் வழக்குகள் ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணையில் இருந்தபோது, சென்னை அமர்வு தலையிட்டு உத்தரவுகளைப் பிறப்பித்தது ஏன்? ஒரே நாளில் மதுரை மற்றும் சென்னை அமர்வுகள் எப்படி வெவ்வேறு உத்தரவுகளை பிறப்பித்தன? இந்த நடைமுறை என்ன?
இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இது "கொடூரமான மரணம்" என்பதால் உயர் நீதிமன்றம் தலையிட்டதாக கூறினர். மேலும், சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கும் அதிகாரி அஸ்ரா கார்க்கை நீதிமன்றமே தேர்வு செய்ததாகவும் விளக்கமளித்தனர்.