அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகிலிருந்தே பிற நாடுகளுடன் வர்த்தகப் போர் மற்றும் வெளிநாட்டவர்க்கு விசா வழங்க மறுத்தல் அகதிகள் கட்டாய வெளியேற்றம் என தடாலடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்கே அதிக முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியா வந்துள்ள அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்போ நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அதனால் இரு நாட்டுக்கும் இடையில் சுமூக உறவு ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில் இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘அமெரிக்கா மீது தொடர்ந்து அதிக வரிகளை இந்திய அரசு விதித்து வருகிறது. இது சம்மந்தமாக பிரதமர் மோடியை சந்தித்து பேச விரும்புகிறேன். ’ என மிரட்டும் தொனியில் கூறியுள்ளார். ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் டொனால்டு ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் இறுதியில் சந்தித்துப் பேச இருக்கிறார்.