நரேந்திர மோதி உரை: '130 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக வெற்றியை பார்க்கிறேன்'
செவ்வாய், 25 ஜூன் 2019 (21:10 IST)
"பல தசாப்தங்களுக்கு பிறகு, தனிப் பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக இந்த அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக வாக்களித்துள்ளனர்" என்று நாடாளுமன்றத்தில் பேசியபோது பிரதமர் நரேந்திர மோதி குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவரின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோதி இன்று உரையாற்றினார்.
"நான் தேர்தல்களை வெற்றி, தோல்வி என்ற பார்வையில் பார்ப்பதில்லை. 130 கோடி இந்தியர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக இதனை பார்க்கிறேன். ஒவ்வொரு குடிமகனின் வாழ்வின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதில் எனக்கு மகிழ்ச்சி" என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 70 ஆண்டுகளாக இருக்கும் சிலவற்றை மாற்றுவதற்கு நேரம் தேவைப்படும் என்றும் மோதி குறிப்பிட்டார்.
2004 முதல் 2014 வரை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசாங்கம் என்றைக்காவது அடல் பிகாரி வாஜ்பேயின் பணிகளை புகழ்ந்திருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பிய பிரதமர் மோதி, நரசிம்மராவின் பணிகளையோ, ஏன் மன்மோகன் சிங் குறித்தாவது பேசியிருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினார்.
தேசிய முன்னேற்றத்திற்கு பலரும் பாடுபட்டிருக்க, காங்கிரஸ் கட்சி ஒரு சில பெயர்களை மட்டுமே குறிப்பிட்டு, மற்றவர்களை புறக்கணித்து விடுவார்கள் என்றார்.
"ஆனால், நாங்கள் மாற்றி யோசிப்போம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நம் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதாக நாங்கள் நினைக்கிறோம்" என்றும் அவர் நன்றி தெரிவிக்கும் உரையின்போது பேசினார்.
"இந்த விவாதத்தின்போது யார் என்ன செய்தார்கள் என்று பலரும் கேட்டார்கள். இன்று ஜூன் 25. அவசரகால சட்டத்தை அமல்படுத்தியது யார்? அந்த இருண்ட காலத்தை யாராலும் மறக்க முடியாது" என்றார் அவர்.
பொது சிவில் சட்டம் மற்றும் ஷா பானு பேகம் வழக்கு போன்ற பல வாய்ப்புகளை காங்கிரஸ் இழந்துவிட்டது. இன்று நாங்கள் பெண்கள் முன்னேற்றத்திற்கான சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். அதனை மதத்தோடு ஒப்பிட வேண்டாம் என்றும் மோதி கேட்டுக் கொண்டார்.
"நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பலரும் பாடுபட்டுள்ளனர். நாம் சுதந்திர போராட்ட தியாகிகள் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும்" என்று நரேந்திர மோதி கூறினார்.
"இன்றைக்கு தண்ணீர் வளங்கள் குறித்து பேசும்போது பாபா சாகேப் அம்பேத்கர்தான் என் நினைவுக்கு வருகிறார். அவர்தான் நம் தண்ணீர்நிலைகள் மற்றும் நீர் பாசனம் ஆகியவை மீது அதிகமாக உழைத்திருக்கிறார்" என்று மோதி தனது உரையில் குறிப்பிட்டார்.