உலகின் மிக கொடூரமான விசாரணை ‘வாட்டர்போர்டிங்': மீண்டும் அமல் படுத்த டிரம்ப் திட்டம்!!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2017 (13:37 IST)
தீவிரவாதிகளை விசாரிக்க முன்னர் அமெரிக்காவில் அமலில் இருந்த சித்ரவதை முறையை மீண்டும் கொண்டு வர தீவிரமாக இருக்கிறேன் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


 
 
அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
 
இந்த தாக்குதலை தொடர்ந்து கடும் கோபமடைந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்தார். அதில் ஒன்று தான் ‘வாட்டர்போர்டிங்'.
 
இதில், விசாரணைக்கு உட்படுவோர் தலை சாய்தளத்தில் கீழ்நோக்கி தொங்குமாறு வைக்கப்படும். பின் புறம் அசைய முடியாமல் கம்பியால் பிணைக்கப்பட்டிருக்கும். பின்னர் மூக்கில் மூச்சு விடமுடியாத அளவுக்கு தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் தண்ணீரில் மூழ்கடிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
 
இதனால், பல நேரங்களில் நுரையீரல் சேதம், மூளை பாதிப்பு, பல நேரங்களில், உயிர் இழப்புகளும் ஏற்பட்டன. இதற்கு உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதையடுத்து, அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பராக் ஒபாமா, ‘வாட்டர்போர்டிங்' சித்ரவதை முறைக்கு தடை விதித்தார். 
 
இந்நிலையில், தற்போது அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அந்த சித்ரவதை அறிமுகப்படுத்தப்படும் என கூறியுள்ளார். நாம் தீவிரவாதிகளை எதிர்க்க அவர்களுக்கு சம அளவுக்காவது செயல்பட வேண்டும். எனவே சித்ரவதை பலன் அளிக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன் என டிரம்ப் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்