யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்த இலங்கை ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனா

வியாழன், 6 செப்டம்பர் 2018 (19:15 IST)
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தால் படையினர் வசமிருந்த யாழ்ப்பாணம் மயிலிட்டி கலைமகள் வித்தியாலயம் 27 ஆண்டுகளுக்குபின் இன்றைய தினம் (வியாழக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது.

 
கடந்த 1818 ஆம் ஆண்டு 35 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையானது படிப்படியாக முன்னேற்றங்களை அடைந்து கடந்த 1990 ஆம் ஆண்டு 877 மாணவர்களுடன் இயங்கி வந்தது.ஆனாலும் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு முதல் அந்தப் பாடசாலையும் அப்பிரதேசமும் இலங்கை படையினர் வசமானது.

இதனால் இப்பாடசாலை கடந்த பல வருடங்களாக அடிப்படை வசதிகள் ஏதுவுமற்ற நிலையில் வெறுமனே 182 மாணவர்களுடன் சுண்ணாகத்தில் தற்காலிக இடத்தில் இயங்கி வருகின்றது. இன்றைக்கு பாடசாலை 200வது ஆண்டைக் கொண்டாடுகின்ற நிலையில், கடந்த 27 வருட படையினர் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதை பாடசாலையின் அதிபர் தமிழ்செல்வி சண்முகானந்தம் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்.

அத்தோடு இப்பாடசாலையை மீண்டும் அதே இடத்தில் ஆரம்பிப்பதற்கான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டுமென்றும் கேட்டுள்ள பாடசாலை அதிபர், அப்படிச்செய்தால் முன்புபோல இப்பாடசாலை தேசிய அளவில் பல சாதனைகளை படைக்குமென்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்த இலங்கை ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் இப்பாடசாலையை விடுவிப்பதாக உறுதிமொழி வழங்கியிருந்த நிலையில் இன்றையதினம் யாழ் மாவட்ட இராணுவ தளபதியினால் யாழ் அரசாங்க அதிபரிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று யாழ் மாவட்டத்தின் ஏனைய சில இடங்களில் படையினர் வசமிருந்த குரும்பசிட்டி கிராம அபவிருத்தி சங்க காணி, தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு சங்க காணி மற்றும் பொது மக்களின் காணிகள் உட்பட நான்கு ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் பாடசாலைக்குச் சொந்தமான காணிகள் அனைத்தும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என்றும் பாடசாலை பழையமாணவர் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்