கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வணிக வளாகங்கள், திரையரங்குகளும் மாத கணக்கில் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாடுகளில் ஊரடங்குகள் தளர்வு செய்யப்பட்டும், ஊரடங்கு காலம் முடிந்தும் வருவதால் பல வணிக வளாகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பல கடைகளை எலிகள் நாசம் செய்து வைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மலேசியாவில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்ட நிலையில் தோல் பொருட்கள் விற்கும் கடையை திறந்த ஊழியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அங்கிருந்த கைப்பை, ஷூ, பெல்ட் என அனைத்து தோல் பொருட்களும் பூச்சை பிடித்தும், பாசி படர்ந்தும் காணப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவற்றில் முடிந்தவரை பலவற்றை சுத்தம் செய்ய முயன்று வருகின்றனர். இதுபோல சில திரையரங்குகளிலும் எலிகள் சீட்டுகளை கிழித்து அட்டகாசம் செய்த செய்தி சமீபத்தில் வெளியானது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு தற்போது முடிய இருக்கும் நிலையில் இங்குள்ள ஷாப்பிங் மால்கள் என்ன கதியில் இருக்கிறதோ என கடை உரிமையாளர்கள் பீதியில் உள்ளார்களாம்.