கத்தார் 2022: கொதிக்கும் மைதானம், சூட்டை தணிக்க பணத்தை தண்ணீராக செலவழிப்பது ஏன்?
வியாழன், 15 டிசம்பர் 2022 (23:27 IST)
உலக கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி அர்ஜென்டினா-பிரான்ஸ் இடையே வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி மைதானத்துக்கு 300 டன் அளவுக்கு மிகவும் தாராளமாக தண்ணீர் உபயோகிக்கப்பட உள்ளது.
பாலைவன பிரதேசமாக அறியப்படும் கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளன. அங்கு இப்போது குளிர்காலம். ஆனாலும் சராசரியாக 25 டிகிரி சென்டிகிரேட் வெப்பமே நிலவுகிறது. இந்த வெப்பத்தை கூட அங்கு தாங்க முடியவில்லை என்று சொல்கின்றனர்.
எனவே மைதானத்தையும், மைதானத்தில் உள்ள பிட்சுகளையும் குளிர்விக்க லிட்டர், லிட்டராக தண்ணீர் செலவிடுகிறது போட்டிக்கான அமைப்புக்குழு.
கத்தார் முழுவதும் பரந்து விரிந்துள்ள போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்கான 10க்கும் மேற்பட்ட மைதானங்களில் பிட்ச்களின் புல்வெளியை அழகாக வைத்திருக்க, கத்தாரின் சமாளிக்க முடியாத வறண்ட வானிலையில் நாளொன்றுக்கு 10,000 லிட்டர் தண்ணீரை, மைதானத்தின் ஊழியர்கள் தெளித்தனர்.
சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்கும் முயற்சி, தங்களின் சொந்த வளர்ச்சி, முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் நடத்துவதை எதிர்கொள்ளல் ஆகியவற்றுக்கு இடையே உலகிலேயே மிகவும் அதிக தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் கத்தாரில் இது போன்று அதிக அளவிலான தண்ணீரை உபயோகிப்பது முக்கியத்துவம் வாய்ந்த சவாலாக கருதப்படுகிறது.
முதலில் திட்டமிட்டபடி கோடையில் போட்டிகள் நடத்தப்பட்டிருந்தால், 136 பயிற்சி ஆடுகளங்களுடன் ஒரு நாளைக்கு 50,000 லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டிருக்கும்.
இதர நாடுகளில் இதுபோன்ற விளையாட்டு மைதானங்களை தயாரிப்பதை விடவும் கத்தாரின் முதல்தரமான விளையாட்டு மைதானத்தை தயாரிப்பது பல்வேறு கட்ட சவால்களை கொண்டிருந்ததாக மைதானத்தின் ஊழியர்கள் சொல்கின்றனர்.
போட்டிகளின் போது அவசர தேவைக்கு என 40 பிட்ச்களுக்காக தாகாவுக்கு வடக்கே புல்வெளி பராமரிக்கப்பட்டது. 4,25,000 சதுர மீட்டரில் வளர்க்கப்பட்ட புற்களுக்கு மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீர் உபயோகிக்கப்பட்டது.
போட்டிகள் மற்றும் பயிற்சிகளுக்கான பிட்ச்களுக்கு கடல் நீர் செயற்கைமுறையில் நல்ல நீராக மாற்றப்பட்டு பயன்படுத்ததப்பட்டது.
"இயற்கையிலேயே கிடைக்கக் கூடியதாக உள்ள தண்ணீர் வளத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியிருந்தால், கத்தாரில் 14000 பேர் மட்டுமே வசிக்க முடியும்," என கத்தார் பல்கலைக்கழகத்தில் கடல்சார் அறிவியல் இணைப் பேராசிரியர் ரதுவான் பென்-ஹமடோ கூறினார்.
"கொஞ்சம் தண்ணீரை மட்டும் சார்ந்திருந்தால் உலகக் கோப்பைக்கு என அமைக்கப்பட்ட மைதானங்களில் கால் பங்கைக்கூட தயார் செய்திருக்க முடியாது, கத்தாரில் ஆறுகள் இல்லை. ஆண்டுக்கு 10 செ.மீ அளவுக்கு குறைவாகவே மழை பெய்கிறது," என்றும் அவர் கூறினார்.
இயற்கையாகவே கிடைக்கக் கூடிய கத்தாரின் நீர் ஆதாரங்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மற்றும் உண்மையான மக்கள் தொகை ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தில் கூடுதலாகத் தேவைப்படும் தண்ணீரை எங்காவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதே பொருளாக இருக்கிறது.
"அதிக அளவிலான தண்ணீர், சுத்திகரிக்கப்படுவதன் மூலமே கிடைக்கிறது. ஏறக்குறைய 100 சதவிகித தண்ணீர் தனிப்பட்ட வீட்டு உபயோகத்துக்காக பயன்படுத்தப்படுகிறது," என்கிறார் சுற்றுச்சூழல், மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு அறிவியலுக்கான இங்கிலாந்து மையத்தின் மத்திய கிழக்கு திட்ட இயக்குநர் டாக்டர் வில் லீ கியூஸ்னே.
சுத்திகரிப்பு முறையில் கடலில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, அதில் இருந்து உப்பு மற்றும் இதர அசுத்தங்கள் நீக்கப்படுகின்றன. அதன் பின்னர் இந்த தண்ணீர் குடிப்பதற்கு அல்லது கழுவுதற்கு உகந்ததாக மாற்றப்படுகிறது. இந்த வழியில்தான் கத்தார் அதிக அளவுக்கு தண்ணீரை உற்பத்தி செய்கிறது.
ஆனால், உலக கோப்பை போன்ற விளையாட்டு நிகழ்வுகள் திட்டமிடும்போது தொடர்ந்து தேவை அதிகரிக்கிறது. எனவே மேலும் அதிக அளவுக்கு உற்பத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது.
கத்தாருக்கு 10 லட்சம் சுற்றுலா பயணிகள் போட்டிகளை காண வருகை தந்ததால் தண்ணீர் உபயோகம் 10 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்தது.
2050 ஆம் ஆண்டில் சுத்திகரிக்கப்படும் தண்ணீர் தேவை நாளொன்றுக்கு 80 பில்லியன் லிட்டராக நான்கு மடங்கு அதிகரிக்கும். ஆனால், கத்தாரில் வரம்பற்ற கடல் நீர் விநியோகம் உள்ளது. மிகப்பெரிய இயற்கை எரிவாயு இருப்பை கொண்டுள்ளது. இதே போல பெரிய அளவிலான தண்ணீரை உற்பத்தி செய்யத் தேவையான பெரும் அளவு நிதி ஆதாரங்கள் தேவை.
இந்த செயல்முறைக்கு பெரும் அளவுக்கு எரிசக்தி தேவைப்படும் என்பது ஒரு பெரிய குறைபாடாக உள்ளது.
உப்புநீக்கும் சுத்திகரிப்பு முறைக்கு வளைகுடா பிராந்தியம் முழுவதும் 99.9% எரிசக்தி பயன்படுத்தப்படுகிறது. மிகக்குறைவாகவே ஹைட்ரோகார்பன் எரிபொருட்கள் கிடைக்கின்றன," என்றும் அவர் தெரிவித்தார்.
எண்ணெய், எரிவாயு போன்ற ஹைட்ரோகார்பன் எரிபொருட்கள் மிகவும் மாசுபடுத்துகின்றன. ஆனால், அதே நேரத்தில் கத்தார் தங்கள் நாட்டுக்கென சுற்றுச்சூழல் இலக்குகளை நிர்ணயித்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் பசுமை குடில் வாயுக்கள் வெளியேற்றத்தை 25 சதவிகிதமாக குறைக்க திட்டமிட்டிருக்கிறது.
உலக கோப்பை போட்டி அமைப்புக் குழு, போட்டிகளின் போது கார்பன் சமநிலையாக இருக்கும் என்று கூறியது.
கார்பன் மார்க்கெட் வாட்ச் போன்ற சுற்றுச்சூழல் குழுக்களால் அந்தக் கூற்று பரவலாக மறுக்கப்பட்டது.
ஆனால் இதில் மறுக்க முடியாத விஷயம் என்னவென்றால், கத்தார் தனது கார்பன் தடயத்தைக் குறைக்க மிகவும் உண்மையான மாற்றங்களைச் செய்து வருகிறது, அதில் நீர் உற்பத்தியும் அடங்கும்.
"பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்கிறார் டாக்டர் வில் லீ கியூஸ்னே.
"அவர்கள் கடல்நீரை குடிநீராக மாற்ற சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான வழியை தேடுகிறார்கள். இதற்கு சோலார் பேனல்கள் மூலம் மின்சாரத்தை உருவாக்கி, அதை எதிர்சவ்வூடு பரவலுக்கு அவர்கள் பயன்படுத்தலாம். அல்லது நீரை ஆவியாக்க சூரிய வெப்பத்தை நேரடியாகப் பயன்படுத்தலாம்" என்றும் அவர் கூறுகிறார்.
எதிர்சவ்வூடு பரவல் செயல்முறையில் கடல்நீர் ஒரு சவ்வு வழியாக கொண்டு செல்லப்பட்டு அசுத்தங்கள் திறம்பட நீக்கப்படுகிறது. அதே சமயம் ஆவியாதல் முறையில் நீரை ஆவியாகும் வரை சூடாக்கி, பின்னர் அதை ஒடுக்கி, அதில் இருந்து அசுத்தங்கள் நீக்கப்படுகிறது.
சூரிய சக்தி, அத்துடன் புதிய, அதிக ஆற்றல் திறன் கொண்ட உப்புநீக்கும் ஆலைகள் கட்டமைப்பை கொண்டு வருவது, கத்தார் நாட்டின் வளர்ந்து வரும் தாகத்தைத் தணிக்கும் என நம்பப்படுகிறது, இது ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்னையாகவும் பார்க்கப்படுகிறது.
அரசியல் சர்ச்சை காரணமாக தனது அண்டை வளைகுடா நாடுகளால் அண்மையில் பொருளாதாரத்தடை விதிப்புக்கு உள்ளானபோது கத்தார் கடுமையான உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டது.
இதன் விளைவாக அது இப்போது தனது வறண்ட நிலப்பரப்பில் பால் மற்றும் விவசாயப் பண்ணையின் அளவை வேகமாக விரிவுபடுத்துகிறது. ஆனால் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களை மட்டுமே கொண்டுள்ள நிலையில் இது தேவையை மட்டுமே அதிகரிக்கும்.
"கத்தாரில் உள்ள நீர் ஆதாரங்களில் மூன்றில் ஒரு பகுதி விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் அது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1%, கிட்டத்தட்ட 0.1% -க்கும் குறைவாகவே பங்களிக்கிறது" என்கிறார் டாக்டர் பென்-ஹமடூ.
பெரும்பாலான நாடுகளைப் போல அல்லாமல், உணவு உற்பத்திக்காக அதன் இயற்கை வளங்களில் கத்தார் அதிக அளவு முதலீடு செய்துவருகிறது. இது அந்த நாட்டின் ஏற்றுமதியை அதிகரிக்கவோ அல்லது பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவோ அல்ல.
ஆனால் அவசரகாலத்தில் தனது மக்களுக்கு உணவளிக்க முடியும் என்று கத்தார் அறிந்திருக்கிறது.
கத்தாரின் எரிசக்திக்கான தீவிரமான திட்டங்கள் பிற நாட்டினருக்கு விசித்திரமாகத் தோன்றினாலும், பல நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை விட சில வழிகளில் இது சற்று வித்தியாசமானது என்று டாக்டர் லு கியூஸ்னே கூறுகிறார்.
கத்தார் மற்றொரு பெரிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வான 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. எனவே, அந்த நாட்டுக்கு இன்னும் பல சவால்கள் வரக்கூடும்.