வெளிநாடு தப்பும் ராஜபக்‌ஷே? விமான நிலையத்தை சூழ்ந்த போராட்டக்காரர்கள்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (12:06 IST)
ரத்மலான விமான நிலையம் அமைந்துள்ள சாலை அருகே ஏராளமான போராட்டக்காரர்கள் குவிந்துள்ளனர். 

 
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள் தற்போது அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இலங்கை முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் ராஜபக்‌ஷே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ராஜபக்‌ஷே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இது நாடு முழுவதும் பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ராஜபக்‌ஷே குடும்பத்திற்கு ஹம்பன்தோட்டா பகுதியில் இருந்த அவர்களது வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். வீடு கொளுந்துவிட்டு எரியும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ராஜபக்‌ஷேவின் அரசு இல்லத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், ராணுவம் வந்து ராஜபக்‌ஷேவை பத்திரமாக மீட்டு வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. 
அரசு இல்லத்திலிருந்து வெளியேறிய ராஜபக்‌ஷே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் வெளிநாட்டிற்கு தப்பி செல்லலாம் என பேசிக்கொள்ளப்படுகிறது. ஆனால், ராஜபக்‌ஷே வெளிநாடு தப்பும் முன் அவரது மகன் யோசிதா வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். எங்கு சென்றுள்ளார் என தெரியாத நிலையில் அடுத்து ராஜபக்‌ஷே மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன. 
 
இதன் காரணமாக ரத்மலான விமான நிலையம் அமைந்துள்ள சாலை அருகே ஏராளமான போராட்டக்காரர்கள் குவிந்துள்ளனர். ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடக்கூடாது என்பதால் விமான நிலையத்தை நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் அவர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்