கல்வி துறைக்கு படித்த அமைச்சர் வேண்டும்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சால் சர்ச்சை..!

Mahendran

வெள்ளி, 24 அக்டோபர் 2025 (11:49 IST)
கேரளாவில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபிக்கும், மாநில கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டிக்கும் இடையே புதிய அரசியல் மோதல் வெடித்துள்ளது.
 
இடுக்கியில் மக்கள் ஆங்கில வழி கல்வி கோரிக்கை வைத்தபோது, சுரேஷ் கோபி, "இந்த அரசாங்கம் ஆட்சியிலிருந்து வெளியேறட்டும்; படித்த ஒரு அமைச்சர் வரட்டும்" என்று கல்வி அமைச்சர் சிவன்குட்டியை மறைமுகமாக குறிப்பிட்டுப் பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இதற்கு பதிலளித்த சிவன்குட்டி, தான் சட்டக்கல்வி பெற்றவர் என்பதை சுட்டிக்காட்டி, சுரேஷ் கோபியின் விமர்சனத்தை மறுத்தார். சி.பி.எம். தலைவர்களும், கோபியின் பேச்சு 'அகங்காரம் நிறைந்தது' என விமர்சித்துள்ளனர்.
 
அரசியல் வட்டாரங்கள், சுரேஷ் கோபியின் இந்த கருத்து, சிவன்குட்டியின் கல்வித்தகுதியை மட்டும் குறிவைக்கவில்லை என்றும், அவர் 2015-ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் ஈடுபட்ட சலசலப்புச் சம்பவம் குறித்த மறைமுக தாக்குதலாக இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.
 
மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்ற பிறகு, ஆளும் சி.பி.எம். கட்சியை கடுமையாக விமர்சித்து வரும் சுரேஷ் கோபியின் இந்த பேச்சு, பாஜக மற்றும் சிபிஎம் இடையேயான வார்த்தைப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. கேரள அரசியல் களத்தில் மீண்டும் ஒரு முக்கியப் பேசுபொருளாக இந்த விவாதம் உருவெடுத்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்