பாகிஸ்தானில் பொருளாதார மந்தநிலை காரணமாக கேஸ் தட்டுப்பாட்டால் மக்கள் பிளாஸ்டிக் பைகளில் கேஸ் நிரப்பி செல்வதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஏற்றுமதி, இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு தேவையான அன்றாட பொருட்கள் கிடைப்பதிலேயே பெரும் பற்றாக்குறை எழுந்துள்ளது. பாகிஸ்தானில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கேஸ் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் பல பகுதிகளில் மக்கள் கேஸ் விற்பனை நிலையங்களில் பெரிய பெரிய பிளாஸ்டிக் பைகளில் கேஸை நிரப்பி எடுத்து செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பைகளில் சிறிய வால்வுகளை பொருத்தி அவற்றை சமையல் எரிபொருளாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
அவ்வாறாக பிளாஸ்டிக் பைகளில் கேஸை நிரப்பி சென்றபோது அவை வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 8 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.