1,850 மைக்ரோசாஃப்ட் நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம்

வெள்ளி, 27 மே 2016 (15:38 IST)
உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது அலுவலகத்தில் பணி புரியும் 1,850 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
 

 
நோக்கியா நிறுவனத்தைக் கைப்பற்றிய பின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் அதற்கான மென்பொருள் உருவாக்குவதில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்தி வருகிறது. ஆனாலும் சந்தையில் ஆண்ட்ராய்டு உடன் போட்டி போட முடியாமல் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறதாம்.
 
இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் இருந்து சுமார் 1,850 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதுவும் நோக்கியா நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் பின்லாந்து நாட்டு அலுவலகங்களில் இருக்கும் ஊழியர்களை வெளியேற்ற மைக்ரோசாஃப்ட் கட்டம் கட்டியுள்ளது.
 
கடந்த 2014ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனம், நோக்கியா நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் சர்வதேச சந்தையில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இறங்கியது.
 
சத்ய நாதெல்லா தலைமையிலான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 1,850 ஊழியர்களின் பணிநீக்கத்தின் மூலம் வருடத்திற்குச் சுமார் 950 மில்லியன் டாலர் அளவிலான செலவுகளைக் குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
 
இந்த பணிநீக்கத்தின் மூலம் விண்டோஸ்-10 மென்பொருளின் மேம்பாட்டு பணிகள் எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்டோஸ்-10 அறிமுகத்தின் மூலம் தனது லூமியா வாடிக்கையாளர்களுக்கும் முழுமையாகச் சேவை அளிக்க முடியும் என மைக்ரோசாப்ட் நம்புகிறது.
 
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வர்த்தகம், ஏப்ரல் மாதத்தின் முடிவில் சந்தையில் 350 மில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை 7.2 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகைக்குக் கைப்பற்றியது. ஆனால், இதன் முதலீட்டுக்கு ஏற்ப வருமானத்தைப் பார்க்க முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்