தினசரி வாழ்க்கையில் வேலை, குடும்பம் என எப்போதுமே மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். வீட்டு பிரச்சினையை சமாளிக்க வேலைக்கு சென்றால் வேலையுமே பலருக்கு பெரும் பிரச்சினை ஆகி விடுவதுண்டு. ஆனால் சீனாவில் உள்ள ஒரு சூப்பர் மார்கெட் நிறுவனம் தனது ஊழியர்களின் மனநலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
நமது ஊர் அண்ணாச்சி கடைகள் போல சீனாவில் பல்வேறு இடங்களில் பல சூப்பர்மார்கெட் கிளைகளை நடத்தி வருபவர் சீன தொழிலதிபர் யு டாங்லாய். இவரது சூப்பர்மார்க்கெட்டுகளில் ஏராளமானோர் பணிபுரியும் நிலையில் அவர்கள் நலனுக்காக பல்வேறு சலுகைகளை, திட்டங்களை வழங்கியுள்ள டாங்லாய். அதில் தற்போது Unhappy Leave என்ற ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் உடல் நிலை சரியில்லை என்றால் மெடிக்கல் லீவ் எடுப்பது போல அந்த சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் மனநிலை சரியில்லை என்றாலோ, மகிழ்ச்சியாக இல்லை என்றாலோ இந்த அன்ஹேப்பி லீவை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக சம்பள பிடித்தமும் கிடையாதாம்.
இதுகுறித்து பேசிய டாங்லாய், தான் பெரிய பணக்காரனாக வேண்டும் என்றும் விரும்பவில்லை என்றும், ஊழியர்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என்று மட்டுமே விரும்புவதாகவும், அதனால்தான் 7 மணி நேரம் மட்டுமே வேலை என்ற கொள்கையை பின்பற்றி வருவதாகவும் கூறியுள்ளார்.