துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து உருவான பூகம்பங்களால் கட்டிடங்கள் சுக்குநூறாக உடைந்தன. இந்த பேரிடர் சில மணி நேரங்களில் 4000 உயிர்களை பலி கொண்டது. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த பேரிடர் உயிரிழப்புகளால் 7 நாட்கள் துருக்கியில் தேசிய துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்திலிருந்து அவர்களை மீட்க மீட்பு படையை அனுப்புவதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி பேரிடரிலிருந்து துருக்கியை மீட்க 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உத்தரபிரதேசம், காசியாபாத் விமானப்படை தளத்திலிருந்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அங்காரா, இஸ்தான்புலில் உள்ள இந்திய தூதரகங்களோடு இணைந்து துருக்கி, சிரியாவுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்து பொருட்கள், நிவாரண பொருட்கள் உள்ளிட்டவற்றை அனுப்பி வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.