அமெரிக்க விமானம் ஒன்றில், இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தியானம் செய்ததால், சக பயணிக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான பயணத்தின்போது இஷான் ஷர்மா தியானம் செய்துகொண்டிருந்ததாகவும், அது அவருக்கு பின்னால் உட்கார்ந்திருந்த பயணிக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அந்த பயணி உடனடியாக விமான பணிப்பெண்ணிடம் புகார் அளித்து, ஷர்மா மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிகிறது.
இதனை கண்டு கோபமடைந்த இஷான் ஷர்மா, அந்தப் பயணியை திட்டியதாகவும், "மரணம் குறித்து அச்சுறுத்தும் வகையில் பேசியதாகவும்" கூறப்படுகிறது. இதை தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும், ஒருவர் கழுத்தை பிடித்து இன்னொருவர் நெரித்து கொண்டதாகவும் தெரிகிறது.
சண்டையை அடுத்து, விமானம் தரையிறங்கியதும் ஷர்மா உடனடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஷர்மா தியானம் செய்ததால் தான் இந்தச் சண்டை மூண்டதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.