சுமார் எட்டு மணி நேரம் நடந்த அந்த விவாதம், 45 நிமிடங்கள் மட்டுமே திருத்தப்பட்டு ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியில் தெரு நாய்களுக்கு ஆதரவானவர்களும், அதற்கு எதிரானவர்களும் பங்கேற்றனர். ஆனால், தெரு நாய்களுக்கு எதிரானவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டதாக நடிகை அம்மு குறிப்பிட்டார். தான் பேச முயன்றபோதெல்லாம், 'வேண்டாம், பேச வேண்டாம்' என்று மைக் வழங்கப்படவில்லை என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
ஒரு தரப்பினர் பேசும்போது மற்றொரு தரப்பினர் சிரிப்பது போன்ற காட்சிகள் வேண்டுமென்றே எடிட்டிங் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். தெரு நாய்களால் பாதிக்கப்பட்டவர்களை தேடிப் பிடித்து அழைத்து வந்து இந்த டாக் ஷோ நடத்தப்பட்டதாகவும், இதில் ஒருதலைப்பட்சமான கருத்துக்களே முன்வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தெரு நாய்களுக்கும் மனிதர்களுக்கும் சமமான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும், மற்றவர்களை வெறுக்கவோ அல்லது புண்படுத்தவோ தான் விரும்பவில்லை என்றும் அவர் விளக்கினார். தான் ஒரு நடிகையாக இருப்பதற்கு மக்கள் தான் காரணம் என்றும், அதனால் மக்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் விரும்ப மாட்டேன் என்றும் அவர் தனது வீடியோவில் உருக்கமாக பேசினார்.