காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி இந்தியா கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதற்கு சர்வதேச அளவில் பாகிஸ்தான் மற்றும் சீனா தவிர அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால் இந்த விஷயத்தை இரு நாட்டு விவகாரமாகப் பேசித் தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக தனது கருத்துகளை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில் ‘இந்தியாவுடன் அமைதி மற்றும் உரையாடலுக்காக நான் செய்த அனைத்து முயற்சியையும் அவர்களை திருப்திப்படுத்தும் முயற்சியாகவே பார்த்துள்ளனர். இனி இந்தியாவுடன் பேசுவது அவசியமில்லை. காஷ்மீரில் உள்ள 80 லட்சம் பேர் உயிருக்கு ஆபத்து உள்ளது. அங்கு வாழும் இஸ்லாமிய மக்களை ஒழிக்கவும், இந்துக்களுடன் இப்பகுதியை விரிவுபடுத்தவும் விரும்புகிறது. காஷ்மீரில் இந்தியா ஒரு மோசமான நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும். அதற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.’ எனத் தெரிவித்துள்ளார்.