பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது சிறையில் இருக்கும் நிலையில், அவரை பார்க்க வந்த அவரது 3 சகோதரிகளை பாகிஸ்தான் போலீசார் கைது செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறையில் இருக்கும் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரிகள் மூன்று பேர் சிறைச்சாலைக்கு வந்தனர். ஆனால், போலீசார் அவர்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்றும், உடனடியாக திரும்பிச் செல்லும்படி எச்சரித்ததாகவும் தெரிகிறது.
ஆனால், இம்ரான் கான் சகோதரிகள் அங்கிருந்து போராட்டம் செய்ததை அடுத்து, அவர்களை போலீசார் கைது செய்ததாகவும், போலீஸ் வாகனத்தில் 3 சகோதரிகளை ஏற்றி சில தூரம் சென்ற பின் விடுதலை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே கடந்த முறையும், இம்ரான் கானை சந்திக்க வந்த அவரது சகோதரிகள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.