இந்தியா - பாகிஸ்தான் : அணு ஆயுதம் பயன்படுத்தினால் 2.1 கோடி பேர் மரணம் : அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (19:12 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் மூண்டு இரு நாடுகளும் தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான உயிரிழப்பு ஏற்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


 

 
காஷ்மீர் மாநிலம், உரியில் ராணுவ முகாமில் கடந்த 18-ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அப்போது நடைப்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 17 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
 
அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய எல்லையில் உள்ள பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது கடந்த 28ம் தேதி இரவு இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஐந்து பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9 ராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
இதற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப் “ தேவை எனில் இந்தியா மீது தாக்குதல் நடத்துவோம் ”என்று கூறியிருந்தார். 
 
இதனால் எல்லைப் பகுதியில் போர் மோகம் சூழ்ந்தது. அங்கு வசித்து வந்த 15 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள். மேலும், இரு நாடுகளும் அணு ஆயுதத்தை பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. அப்படி இரு நாடுகளும் அணு ஆயுதத்தை பயன்படுத்தினால், என்ன விளைவு ஏற்படும் என சிகாகோ பல்கலைகழக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
அதன்படி, அப்படி நடந்தால், ஒரே நேரத்தில் 2.1 கோடி மக்கள் பலியாகக் கூடும் என்றும், இதனால் பூமியை சுற்றியுள்ள ஓசோன் படலம் சுமார் 50 சதவிகிதம் பாதிப்பிற்கு ஆளாகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
 
அதன் மூலம் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு சுமார் 200 கோடி மக்கள் வறுமையில் மூழ்க வாய்ப்பிருக்கிறது என்றும் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அடுத்த கட்டுரையில்