மழையை பொருட்படுத்தாமல் குவிந்த 17 லட்சம் மக்கள்: தீவிரமடைந்தது ஹாங்காங் போராட்டம்
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (16:47 IST)
ஹாங்காங் கைதிகளை சீனாவிற்கு கொண்டு செல்லும் தீர்மானத்திற்கு எதிராய் ஹாங்காங் மக்கள் தீவிரமான போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாக கருதப்பட்டு வந்தாலும், சீனாவின் சிறப்பு அந்தஸ்து பெற்ற ஒரு பகுதியாகவே ஹாங்காங் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஹாங்காங் கைதிகளை சீனா சிறைகளுக்கு கொண்டு செல்லும் மசோதா ஹாங்காங் அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கூறி கடந்த இரண்டு மாத காலமாக ஹாங்காங் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் போராட்டக்காரர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை அதிரடியாக விமான தலத்திலிருந்து வெளியேற்றியது ஹாங்காங் போலீஸ்.
ஹாங்காங் மக்களின் இந்த வன்முறை போக்கை கண்டித்த சீனா இதனால் மிகப்பெரும் பின்விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்தது. எனவே போராட்டத்தை அமைதியான முறையில் நடத்துமாறு ஹாங்காங் தலைவர் கேரி லேம் கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற அகிம்சை போராட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 17 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்ட ஊர்வலம் சென்றனர். தங்களது கோரிக்கைகளை அரசு ஏற்கும்வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.