’வரலாறு என்னை விடுதலை செய்யும்’ - நீதிமன்றத்தில் முழங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (12:23 IST)
1953ஆம் ஆண்டு முதல் 1959 ஜனவரி முதல் தேதி வரை சுமார் ஐந்தரை ஆண்டுகள் இருவரும் பல தாக்குதலுக்குப் பிறகு, பனி, மழை என பொருட்படுத்தாது, குளிரிலும் வெயிலிலும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக போராடினர். ஆயுதப்போரட்டத்தின் மூலம் கியூப புரட்சியை முன்னெடுத்துச் சென்றவர் ஃபிடல் காஸ்ட்ரோ.


 

இதற்கிடையில், காஸ்ட்ரோ பாடிஸ்டா அரசால் கைது செய்யப்பட்டார். அப்போது, நீதிமன்றத்தில் ஃபிடல் காஸ்ட்ரோ புரட்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இதுவே, பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE ME) என்ற பெயரில் வெளிவந்தது.

”நீங்கள் என்னை தண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்” என்றார். பின்னர், 1955ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார்.

அந்த உரையில் சில குறிப்பிடத்தக்க அம்சங்களை மட்டும் வாசகர்களுக்காக:

மனசாட்சியை விலை பேசுவதற்காக அரசியல்வாதிகள் பல லட்சங்களை செலவு செய்த அதே நேரத்தில் தங்கஆள் நாட்டின் பெருமையை காப்பாற்ற விரும்பிய ஒரு சில இளைஞர்களே நிதி வசதியில்லாததால் மரணத்தை சந்திக்க நேரிட்டுள்ளது. இந்நாடு இன்று வரையிலும் பெருந்தன்மையான உறுதியான மனிதர்களால் ஆளப்படவில்லை. மாறாக, நமது பொதுவாழ்க்கையின் கசடுகளான அரசியல் வியாபாரிகளால் ஆளப்படுகிறது என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது.

எங்களது கொள்கையின்படி, நேற்றைய அல்லது இன்றைய அரசியல்வாதிகள் எவரிடமும் ஒரு சல்லிக்காசுகூட நாங்கள் கேட்டதில்லை என்பதை நான் மிகுந்த பெருந்தன்மையுடன் உங்களிடம் கூறிக் கொள்கிறேன். எங்களது தேவைகள் ஒப்பற்ற தியாகங்களால் இணைந்ததுதான்.”

”அதிகாலை நேரத்தில் எங்களது தோழர்கள் பலரும் ராணுவ முகாமிலிருந்து சிபோனி, லார்மயா, சோங்கோ போன்ற பல்வேறு பகுதிகளுக்கு ஊர்திகளில் அழைத்துச் செல்லப்பட்டனர், ஏற்கனவே, சித்தரவதைகளால் உருக்குலைக்கப்பட்ட அவர்கள் பின்னர், கைகள் கட்டப்பட்டும், வாயில் துணியடைக்கப்பட்டும், விடுவிக்கப்பட்டு ஒதுக்குப்புறமான பகுதிகளில் கொலை செய்யப்பட்டனர்.

என்றாவது ஒருநாள் இவர்கள் தோண்டியெடுக்கப்படுவார்கள். அவர்கள், மக்களால் தோள்களில் சுமந்து செல்லப்பட்டு, மார்த்தியின் கல்லறைக்கருகே புதைக்கப்படுவார்கள். அவர்களது சுதந்திர நாடு இந்த நூற்றாண்டின் தியாக வீரர்களின் நினைவாக ஒரு நினைவுச் சின்னத்தை நிச்சயம் உருவாக்கும்.”

தாய் நாட்டின் மடியில்
ஒருவன் உயிர் விடும்போது
துன்பம் முடிகிறது;
சிறைச் சங்கிலிகள் தெறிக்கின்றன.

இறுதியில்,
அந்த மரணத்திலிருந்து
வாழ்வு துவங்குகிறது.

இதுவரை யாரும் அனுபவித்திராத வகையில் எனது சிறைவாசம் மிகக் கடுமையாக இருக்கும் என்பதையும், கோழைத்தனமான அடக்குமுறைகளையும், மிருகத்தனமான கொடுமைகளையும், அதில் நிறைந்திருக்கும் என்பதையும் நான் அறிவேன்.

இருந்தபோதிலும், எனது உயிரினுமினிய 70 தோழர்களைப் பலி வாங்கிய அந்த கொடுங்கோலனின் கோபத்தைக் கண்டு நான் எவ்வாறு அந்தவில்லையோ, அதைப் போன்றே இந்தச் சிறைவாசத்தை கண்டும் நான் அஞ்சப்போவதில்லை!

என்னைத் தண்டியுங்கள்! அது எனக்குப் பொருட்டல்ல! வரலாறு என்னை விடுதலை செய்யும்.

 
அடுத்த கட்டுரையில்