துபாயில் பெய்த கனமழை காரணமாக விமான சேவை முடங்கியதோடு, மழை நீர் இன்னும் வடியாததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
துபாயில் கடந்த இரண்டு நாட்களாக பேய் மழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத அளவிற்கு பெய்த மழையால் துபாய் நகரம் இன்னும் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகிறது.
இந்தப் பெருமழை குறித்து இது வரலாறு காணாத வானிலை நிகழ்வு என்றும், கடந்த 1949-ம் ஆண்டு முதல் இப்படி ஒரு மழை பெய்தது இல்லை என்றும் அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான WAM தெரிவித்துள்ளது.
இதனிடையே துபாய் மழை வெள்ளத்தால் முக்கியமான போக்குவரத்து முனையமான துபாய் விமான நிலையம் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
விமான ஓடுதளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்லும் டெர்மினல் 1-ல் விமானங்கள் இறங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. துபாய் நகரத்தின் சாலைகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் நகரவாசிகள் தங்களின் வாகனங்களை மீட்க முடியாமல் அவற்றைக் கைவிடும் சூழலில் உள்ளனர்.
மேலும், கடுமையான மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய அவர் உத்தரவிட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம் பணி நடைபெற்று வருகிறது
தற்போதைய பெருமழைக்கு ஐக்கியஅரபு அமீரகம் செயற்கை மழைக்காக மேக விதைப்பு காரணமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அது உண்மையில்லை என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வானிலை ஆய்வு மையம் மறுத்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் மூத்த அதிகாரி கூறுகையில், மேக விதைப்பு எதுவும் நிகழ்த்தப்படவில்லை. தவறாக பரப்பப்படும் தகவல்களை மக்கள் நம்பவேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.