இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, 53 வயது பெண்மணி ஒருவர் பக்கவாதத்தில் உயிரிழந்த போது அவரின் வெவ்வேறு உறுப்புகள் நான்கு தனித்தனி நபர்களுக்கு மாற்றப்பட்டது. உறுப்பு மாற்ற சிகிச்சையின் போது செய்ய வேண்டிய அனைத்து சோதனைகளையும் செய்துள்ளனர். அதில் உறுப்புகளில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அவை ஆரோக்யமானவை என்றும் அறிந்த பின்னரே அவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
ஆனால் அறுவை சிகிச்சை முடிந்து 16 மாதங்கள் கழித்து அவரிடம் இருந்து நுரையீரலை தானமாகப் பெற்றவர் நுரையீரல் தொடர்பான சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதுதான் அவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. புற்றுநோய் செல்களை எடுத்து டி.என்.ஏ. ஆராய்ச்சிக்கு உட்படுத்தியபோது அவை மாற்றப்பட்ட நுரையீரலில் இருந்து பரவியிருப்பது தெரியவந்தது. மேலும் அந்த நபரை காப்பாற்ற முடியாமல் இறந்துவிட்டார்.
இதனையடுத்து மருத்துவர்கள் உறுப்பு தானம் பெற்ற மற்ற மூவரையும் அழைத்து சோதித்து பார்க்கும்போது மருத்துவர்களை அதிர்ச்சியாக்கும் விதமாக அனைவருமே மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
அதைத் தொடர்ந்து மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காமல் கல்லீரல் தானம் பெற்ற 59 வயது பெண்ணும் ஒரு சிறுநீரகத்தை தானம் பெற்ற 62 வயது பெண்ணும் இறந்துவிட்டனர். இரண்டாவது சிறுநீரகத்தை தானம் பெற்ற ஆண் ஒருவர் மட்டுமே தற்போது உயிரோடு இருக்கிறார். மருத்துவர்கள் அவரின் பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை செய்து எடுத்து விட்டனர். தற்போது அவருக்கு புற்று நோய்க்கான சிகிச்சை அளித்து வருகின்றனர்.