மக்கள் தொகையை போக போக ரொம்ப இழப்பீங்க! – சீனாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

புதன், 8 ஜூன் 2022 (15:48 IST)
உலக அளவில் மக்கள் தொகையில் முதல் இடத்தில் உள்ள சீனா ஒவ்வொரு தலைமுறையிலும் 40 சதவீதம் மக்கள் தொகையை இழக்கும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய பணக்காரர்களின் முக்கியமானவராக திகழ்பவர் எலான் மஸ்க். அடிக்கடி இவர் வெளியிடும் பல தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைகின்றன. சமீபத்தில் மக்கள் தொகை பற்றிய அவரது கூற்றுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

உலகம் முழுவதும் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருவதாகவும், அதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பலரும் பேசி வரும் நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முயல்வது மக்கள்தொகை வீழ்ச்சியோடு நாகரிகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் எலான் மஸ்க் எச்சரிக்கிறார்.

உலகம் தற்போது உள்ள மக்கள் தொகையை விட அதிகமான மக்கள் தொகையை தாங்கும் வலிமை கொண்டுள்ளதாகவும், மக்கள் தொகை அதிகரித்தாலும் சுற்றுசூழல் பாதிக்கப்படாது என்று பேசி வருகிறார்.

சமீபத்தில் சீனாவின் மக்கள் தொகை குறித்து பேசிய அவர் “சீனாவில் இன்னமும் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை உள்ளதாக நாம் நினைக்கிறோம். ஆனால் 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள சீனாவில் அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு தலைமுறையிலும் சீனா தனது மக்கள் தொகையிலிருந்து 40 சதவீதம் பேரை இழக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள்தொகை பற்றிய அவரது கருத்துகள் விவாதப்பொருளாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்