பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் உலக தலைவர்கள் பேஷன் ஷோவில் நடந்து வருவது போல வெளியிட்டுள்ள ஏஐ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நவீன தொழில்நுட்பத்தில் பல்வேறு துறைகளிலும் ஏஐயின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சமீபமாக AI டெக்னாலஜியை பயன்படுத்தி ஒரு வீடியோவில் ஒருவர் முகத்திற்கு பதிலாக மற்றொருவர் முகத்தை எளிதாக மாற்றிவிட முடிகிறது. இந்நிலையில் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க் அவ்வாறாக உலக தலைவர்கள், செல்வந்தர்கள் சிலர் பேஷன் ஷோவில் நடந்து செல்வது போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட அந்த வீடியோவில் போப்பாண்டவர், ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், சீன அதிபர் ஜீ ஜிங்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகெர்பெர்க், ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் என பலரும் அவர்கள் துறை சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த உடைகளில் பேஷன் வாக் வருகின்றனர்.
ஒபாமாவுக்கு மட்டும் விதவிதமான காஸ்ட்யூம்களில் பேஷன் வாக் நடத்திய எலான் மஸ்க், தானும் அதில் உள்ளாடையில் எக்ஸ் என்ற அடையாளத்துடன் தோன்றுவது போலவும் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில், அரசியல் தலைவர்களை கிண்டல் செய்யும் வகையில் உள்ளதாக அவர்களது ஆதரவாளர்கள் எலான் மஸ்க்கை விமர்சித்துள்ளனர்.
Edit by Prasanth.K