ரஷ்யாவுடனான எண்ணெய் வணிகத்திற்காக இந்தியாவிற்கு வரி விதித்த ட்ரம்ப், அடுத்ததாக ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தம் தர தொடங்கியுள்ளார்.
அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்த ட்ரம்ப், இந்தியாவிற்கு 25 சதவீதம் வரி விதித்தார். பின்னர் ரஷ்யாவுடன் இந்தியா கச்சா எண்ணெய் வணிகம் செய்வதை கண்டித்த ட்ரம்ப் வரியை 50 சதவீதமாக உயர்த்தினார். ஆனால் அமெரிக்காவே ரஷ்யாவோடு பல்வேறு வர்த்தகங்களை மேற்கொண்டு வருவது குறித்து அவர் மௌனம் காக்கிறார்.
கேட்டால் உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்துவதற்கு இந்தியா போன்ற நாடுகள் வழங்கும் வணிக ஆதரவே காரணம் என குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் இந்தியாவை தொடர்ந்து அடுத்து ஐரோப்பிய நாடுகளை அழுத்தத் தொடங்கியுள்ளார் ட்ரம்ப்.
சமீபத்தில் ரஷ்யாவுடன் ஐரோப்பிய நாடுகள் வணிகம் செய்வது குறித்து கவலை தெரிவித்தாரம் ட்ரம்ப். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலில் “ஐரோப்பிய நாடுகள் ஒரு ஆண்டிற்கு 1.1 பில்லியன் யூரோ அளவிலான வர்த்தகத்தை ரஷ்யாவுடன் மேற்கொள்கின்றன. ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடனான வர்த்தகத்தை குறைப்பதன் மூலம் போருக்கு நிதியளிப்பதை நிறுத்த முடியும். அதுமட்டுமல்லாமல் சீனா தொடர்ந்து ரஷ்யாவிற்கு நிதியுதவி செய்து வருவதால் சீனா மீதும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்” என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சீனாவில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங் உடன் பிரதமர் மோடியும் கைக்கோர்த்து நின்ற நிலையில், தற்போது சீனா, ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளை கொம்பு சீவி விட ட்ரம்ப் முயல்வதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K