கருவில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பை அறிய மொபைல் ஆப்

Webdunia
வெள்ளி, 27 மே 2016 (02:51 IST)
கருவில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பை அறியும் வின்செங்கா என்ற மொபைல் ஆப்பை உகாண்டாவை சேர்ந்த கல்லூரி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.


 

 
தென் ஆப்பிகாவிலுள்ள உகாண்டா உலகின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றாகும். இங்கு உள்ள பொருளாதார நெருக்கடியும், போதிய அளவில் மருத்துவக் கருவிகள் இல்லாமையும், பிரசவத்தின் போது பிறக்கும் குழந்தைகளும், தாய்மார்களும் இறந்து போவதற்கு காரணமாய் அமைகின்றன. 
 
பிரசவ காலத்தில் குழந்தையின் இதயத்துடிப்பை தெரிந்து கொள்ளும் 'அல்ட்ராசவுண்ட்' எனப்படும் இயந்திரத்தினை வாங்கும் அளவிற்கு, உகாண்டாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு நிதி இல்லை.
 
இதனால், பல ஆண்டு காலமாக, கருவில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பை தெரிந்து கொள்ள, 'பின்ஹார்ட் ஹார்ன்' (Pinard horn) எனும் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை உபயோகிக்கத் தெரிந்த பெண்களால் மட்டுமே இதைக் கொண்டு இதயத் துடிப்பை தெரிந்து கொள்ள முடியும் என்பதால், குழந்தைகளுக்கு எதேனும் குறைபாடுகள் இருந்தாலும், அதை கண்டுபிடிக்க முடியாமல் போகிறது.
 
இந்த சூழலில் வளர்ந்த, ஜோஷ்வா ஒக்கேலோ என்ற கல்லூரி மாணவர், தனது நண்பர் ஆரோன் டுஷாபேவுடன் இணைந்து,  'வின்செங்கா (WinSenga)' எனும் மொபைல் ஆப்பினை உருவாக்கியுள்ளனர்.

பழைய கருவியான பின்ஹார்ட் ஹார்னை, கொஞ்சம் நவீனப்படுத்தி, மொபைல் போனுடன் பொருத்தி, இந்த ஆப்பினை ஆன் செய்தால், குழந்தையின் இதயத்துடிப்பை, மிகத்துல்லியமாக தெரிந்துகொள்ள முடிகிறது. மொபைலை, ஹெட் போனுடன் கனெக்ட் செய்வதால், தாயாலும், குழந்தையின் இதயத்துடிப்பை கேட்க முடியும்.
 
மேலும் இந்த ஆப் பற்றி அறிந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இந்த மாணவர்களுக்கு, 50,000 டாலர்களை பரிசாக வழங்கியுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்