துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய ஒருவரை நாய் ஒன்று காப்பாற்றியதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
துருக்கியில் கடந்த 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பல இடிந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் துருக்கி, சிரியா நாடுகள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
மீட்பு பணிகளுக்காக மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கட்டிட விபத்தில் சிக்கிய ஒருவர் இடிபாடுகளுக்கு இடையே கையை நீட்டுவது போலவும், அதை மோப்ப நாய் ஒன்று மோப்பமறிந்து உதவிக்கு பலரை அழைப்பது போன்றதுமான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. சிலர் அந்த நாய் தனது எஜமானரை காப்பாற்ற முயற்சி செய்வதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
ஆனால் இந்த புகைப்படம் செக்கோலோவேகியா நாட்டை சேர்ந்த புகைப்படக்காரர் ஜோரஸ்லவ் நோஸ்கா கடந்த 2018ம் ஆண்டில் எடுத்த போட்டோ என தெரிய வந்துள்ளது. இந்த புகைப்படம் பழையது என்றாலும் கூட மீட்பு பணிகளில் மோப்ப நாய்கள் தீவிரமாக பணியாற்றி பலரை காப்பாற்றி வருகின்றன என்பது உண்மைதான் என பலர் கூறியுள்ளனர்.