ஜப்பானில் 19 மாற்றுத்திறனாளிகளை குத்திக் கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகில் உள்ள சகாமிஹரா பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 150 பேர் வரை சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் வரை இந்த மையத்தில் உமட்சூ (26) என்ற இளைஞர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 2.10 மணியளவில் மையத்தின் முதல் மாடியில் உள்ள ஜன்னலை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த உமட்சூ, அங்கிருந்த டாக்டர்கள், பாதுகாவலர்களை கயிறால் கட்டிவைத்துள்ளார். பின்னர் அங்கு உறங்கிக் கொண்டிருந்த மாற்றுத் திறனாளிகளை கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
இதில் 19 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 25 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையினர் உமட்சூவை கைது செய்து விசாரித்ததில், மாற்றுத் திறனாளிகள் இல்லாத உலகை உருவாக்க இந்த கொலையில் ஈடுபட்டதாக கூறினார். ஏற்கெனவே ஜப்பான் நாடாளு மன்றத்துக்கு உமட்சூ கடிதம் ஒன்று அனுப்ப முயன்றுள்ளார். அதில் ’உலகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் கருணை கொலை செய்யப்பட வேண்டும்’ என்றும் ’இதற்கு அரசு உத்தரவிட்டால் தன்னால் 470 பேர் வரை கொலை செய்ய முடியும்’ என்றும் கூறப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஜப்பானில் 1938-ம் ஆண்டில் கோடாரி, கத்தி மற்றும் துப்பாக் கியால் மர்ம நபர் 30 பேரை சுட்டுக் கொன்றார். அதன் பிறகு வேறு எந்தவொரு குற்றச்செயல்களும் அந்நாட்டில் நடந்ததில்லை.