உலக சினிமா - Who Am I

Webdunia
புதன், 29 ஜூன் 2016 (13:13 IST)
ஹு ஆம் ஐ என்ற பெயரில் ஜாக்கிசான் நடிப்பில் ஒரு படம் வந்தது. அது 1998 -இல். இது ஜெர்மன் திரைப்படம். 2014 -இல் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த Baran bo Odar இயக்கியது.


 
 
Baran bo Odar 2010 -இல், தனது 32 -வது வயதில் 'த சைலன்ஸ்' என்ற திரைப்படத்தை இயக்கினார். மிகமிக அற்புதமான த்ரில்லர். 2014 -இல் அவர் இயக்கிய படம்தான், ஹு ஆம் ஐ.
 
பெஞ்சமன் என்ற இளைஞன் ஹானி லின்ட்பெர்க் என்ற ஈரோபோல் (Europol) அதிகாரியிடம் தான் கம்ப்யூட்டர் ஹேக்கர் ஆனதையும், அதுவரை செய்த கிரிமினல் நடவடிக்கையையும் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதில் படம் தொடங்குகிறது.
 
ஐரோப்பிய யூனியனை சேர்ந்த நாடுகளின் ஒன்றிணைந்த 'லா இன்போர்ஸ்மெண்ட் ஏஜென்சி'யின் பெயர், 'ஈரோப்பியன் போலீஸ் ஆபிஸ்'. சுருக்கமாக ஈரோபோல். நெதர்லாந்தின் ஹாக் என்ற நகரில் இதன் தலைமையகம் உள்ளது.
 
பெஞ்சமின் சின்ன வயதிலேயே தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாக கற்பனை செய்து கொண்டவன். ஹேக்கிங் அவனுக்கு பிடித்தமான விஷயம். ஒரு சந்தர்ப்பத்தில் மேக்ஸ் என்பவனுடன் பெஞ்சமினுக்கு தொடர்பு ஏற்படுகிறது. மேக்ஸும் ஒரு ஹேக்கர்தான். தனது இரு நண்பர்களுடன் ஹேக்கிங்கில் ஈடுபடுகிறவன். அவர்களுடன் பெஞ்சமினும் சேர்ந்து கொள்கிறான். ஹேக்கிங் திறமையை வைத்து சின்னச் சின்ன குளறுபடிகளை செய்து சமூகத்தின் கவனத்தை ஈர்க்கிறார்கள். தங்கள் கூட்டணிக்கு கிளே என்று பெயரும் வைக்கிறார்கள். ஆனால், அவர்களின் ஒரே குறிக்கோளாக இருப்பது, ஹேக்கிங் உலகில் மன்னனாக திகழும் MRX என்பவனிடமிருந்து பாராட்டை பெறுவது. அதற்காக ஜெர்மனியின் ஃபெடரல் இன்டெலிஜென்ஸ் சர்வீசின் அலுவலகத்தில் புகுந்து அங்குள்ள கம்ப்யூட்டரை ஹேக் செய்து, அந்த கட்டிடம் முழுவதும் உள்ள பிரிண்டர்களில், கிளே - நோ சிஸ்டம் இஸ் சேஃப் என்ற வாசகம் பிரிண்ட் ஆகும்படி செய்கிறார்கள்.
 
இந்த ஹேக்கிங்கின் போது போலீஸின் முக்கியமான சில தரவுகளை பெஞ்சமின் நண்பர்களுக்கு தெரியாமல் டவுன்லோடு செய்கிறான். அதனை மேக்ஸ் மீதான கோபத்தில் MRX -க்கு அனுப்பியும் விடுகிறான். மறுநாள் FRI3NDS என்ற ஹேக்கர் குழுவின் நால்வரில் ஒருவன் - கிரிப்டான் என்ற பட்டப் பெயர் கொண்டவன் - சுட்டுக் கொல்லப்படுகிறான். 
 
FRI3NDS என்ற ஹேக்கர் குழு மொத்தம் 4 பேர்களை கொண்டது. அதில் மூன்று பேர்களின் பட்டப்பெயர்கள் போலீசுக்கு தெரியும். நான்காவது ஆள் யார் என்பது தெரியாது. இந்தக்குழு ரஷியாவின் மாஃபியா கும்பலுடன் தொடர்புடையது. இதன் ரகசியங்களை போலீசாருக்கு தர கிரிப்டான் முன்வந்ததைதான், பெஞ்சமின் MRX- க்கு அனுப்பியிருந்தான். ஃபெடரல் இன்டெலிஜென்ஸ் சர்வீசின் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த கிளே குழுதான் கிரிப்டானின் மரணத்துக்கு காரணமாக இருக்க முடியும் என்ற போலீசாரின் முடிவால் கிளேயும் தீவிரவாத குழுவாக அறிவிக்கப்படுகிறது. 
 
பெஞ்சமினும் நண்பர்களும் அனைத்து தடயங்களையும் அழித்துவிட்டு MRX -இன் அடையாளத்தை அறிய முயற்சிக்கிறார்கள். MRX பெஞ்சமினை ஏமாற்றி அவன் யார் என்பதை போலீசுக்க தொரியப்படுத்திவிடுகிறான். போலீசிடமிருந்து தப்பித்து பெஞ்சமின் ஹோட்டல் அறைக்கு வருகையில் மேக்ஸ் உள்ளிட்ட நண்பர்கள் மூவரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
 
ஹானி லின்ட்பெர்க்கிடம் MRX  கண்டுபிடிக்க உதவி செய்வதாக பெஞ்சமின் கூறுகிறான். ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் ஹானி அதற்கு சம்மதிக்கிறாள். தனது புத்திசாதுர்யத்தால் MRX யுஎஸ்ஸை சேர்ந்த 19 வயது மாணவன் என்பதை பெஞ்சமின் கண்டுபிடிக்க, யுஎஸ் போலீஸ் அவனை கைது செய்கிறது.
 
ஆரம்பித்ததிலிருந்து முடிவுவரை விறுவிறுப்பு குறையாமல் செல்லும் த்ரில்லர் படம் இது. படத்தின் இறுதியில் ஹானி இன்னொரு உண்மையை கண்டுபிடிக்கிறாள். உண்மையில் கிளே என்பது பெஞ்சமின் ஒருவனை மட்டுமே கொண்டது. மேக்ஸ் மற்றும் அவனது இரு நண்பர்கள் பெஞ்சமினின் கற்பனை. அவனுக்கு தனது தாயைப் போல் மல்டிபிள் பர்சனாலிட்டி பிரச்சனை உள்ளது. மேக்ஸுக்கு ஏற்பட்டதாக அவன் சொன்ன காயம் உண்மையில் பெஞ்சமின் கையில்தான் உள்ளது. பெஞ்சமின் மீதான இரக்கத்தில், அவனை குறித்த அத்தனை போலீஸ் ரிக்கார்ட்களையும் அழித்து பெஞ்சமினை ஹானி விடுவிக்கிறாள். 
 
ஆனால், ஆச்சரியம் இந்த இடத்திலும் முடிவடைவதில்லை. ஹேக்கர் என்பது ஒருவகையான மேஜிக். அதில் தேவைப்பட்டதைதான் மற்றவர்கள் பார்க்கிறார்கள். பெஞ்சமின் சொல்லும் இந்த கருத்துக்குப் பின்னால் வேறொன்று உள்ளது. ஹானி அதனை தெரிந்து கொள்ளும் போது பெஞ்சமின் அவள் பிடிக்க முடியாத இடத்துக்கு சென்றுவிட்டிருக்கிறான். 
 
ஹேக்கர் குறித்த திரைப்படங்களில் இப்படம் முக்கியமானது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்