பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் முடி உதிர்வை போக்கும் குறிப்புகள்...!
முதல் பிரசவத்திற்குப் பின் தாய்மார்களுக்கு ஏற்படும் இந்த அதீத முடி உதிர்வு, ஓராண்டு வரை நீடிக்கும். இது ஒரு பொதுவான நிகழ்வாகும். ஏனெனில், பிரசவ காலத்தில், அதிமுக்கியமான ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரான் உள்பட அனைத்து ஹார்மோன்களின் சுரப்பும் உச்சத்தில் இருக்கும்.
பிரசவம் முடிந்ததும், இது, கிடுகிடுவென சரிவதே, முடி கொட்ட முக்கிய காரணமாகும். அதேசமயம், ஹார்மோன்களின் உச்சம் காரணமாக, பிரசவ காலத்தில் முடி கொட்டுவது தடைப்பட்டு, கூந்தல் பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் காணப்படும். குழந்தை பிறந்ததுமே, கூந்தலில் இருந்த பளபளப்பு மங்கி, திடீரென கொட்ட தொடங்கும்.
இத்தகைய முடி உதிர்வு, குழந்தை பிறந்ததில் இருந்து, எந்த நாளில் வேணாலும், ஆரம்பித்து, ஓராண்டு வரை நீடிக்கக்கூடும். குழந்தை பிறந்த 4வது மாதத்தில் இப்பிரச்சனை உச்சத்தை எட்டும்.
உங்களின் தலைமுடியை குட்டையாக வெட்டிக்கொள்ளுங்கள். கைக்குழந்தை இருக்கும்போது, நீண்ட கூந்தலை பராமரிப்பது மிகக் கடினம். தலை வாரும்போது, மிக மென்மையாகச் செய்யுங்கள். தலை முடியை அழுத்தி வாரினால், வேர்ப்பகுதிகளில் தேவையற்ற எரிச்சல் ஏற்படும். ஒரு நாளில், 2 முறைக்கு மேலாக, தலை வார வேண்டாம்.
தலைமுடி ஈரமாக இருக்கும்போது, எளிதில் உடையும் என்பதை மறந்துவிடாதீர். எனவே, பல் வைத்த சீப்புகளை பயன்படுத்தாமல், தலைமுடியை இயற்கையாக உலர விடுவதே நல்லது.
பிறந்த குழந்தைக்கு, தாய்ப்பால் புகட்ட வேண்டும் என்பதால், இந்த காலகட்டத்தில், நீங்கள் ஊட்டச்சத்தான உணவுதான் சாப்பிடுவீர்கள். ஆனாலும், தலைமுடிக்கு வலு சேர்க்கும் உணவுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். முட்டை, இறைச்சி மற்றும் பன்னீர் போன்றவற்றில் உள்ள புரதங்கள் இதற்கு நல்ல பலன் தரும்.
இரும்புச்சத்து, வைட்டமின் சி நிரம்பிய அடர் பச்சை நிற கீரைகள், பீட்டா கரோட்டின் உள்ள கேரட், ஒமேகா 3 அமிலங்கள் மற்றும் மெக்னீசியம் நிறைந்த மீன் ஆகியவற்றை அதிகம் சாப்பிடலாம். முக்கியமாக, நிறைய காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுங்கள். அவற்றில் உள்ள நிறமிகள், உயிர்ச்சத்துகள் தலை மயிர்க்கால்களை பாதுகாத்து, நன்றாக வளர ஊக்கம் தரும்.
நிரூபிக்கப்பட்ட பொருட்களான இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். பிருங்கா, வேம்பு கலந்த எண்ணெய் தடவி, உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால், தலை முடியின் வேர்ப்பகுதி பலமடைந்து, தனது அசல் மினுமினுப்பை திரும்ப பெறும்.
பிரசவ காலத்தில், சீரான உணவுப்பழக்கம் இல்லாமல் இருந்திருந்தால், வைட்டமின் மாத்திரைகள் உங்களுக்கு உதவக்கூடும். ஒட்டுமொத்த உடல்நலனை பாதுகாக்கவும், தலைமுடி உதிர்வை ஒரேயடியாக தடுத்து நிறுத்தவும் வைட்டமின்கள் நல்ல பலன் தருபவை. குழந்தை பிறப்பதற்கு முன்பிருந்தே, நீங்கள் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி மாத்திரைகளை சாப்பிட்டு வந்திருந்தால், அவற்றை குழந்தை பிறந்த பிறகும் தொடரலாம். எதற்கும் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.
நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களில், பயோடின், சிலிகா போன்றவை கலந்திருக்க வேண்டும். அவை தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.