குழந்தைகளை பொறுத்தவரை, காது, மூக்கு, மற்றும் தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அவர்களுடைய உடல்நலம் மற்றும் கற்றல் திறனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பள்ளி செல்லும் குழந்தைகள் இத்தகைய பாதிப்புகளால் அடிக்கடி பாதிக்கப்படுவதால், பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து இந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.
குழந்தைகளுக்கு காது வலி ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனை. சளி பிடிக்கும்போது மூக்கின் பின் பகுதியில் உள்ள குழாய் அடைபட்டு, காதுக்கு செல்லும் பாதையில் தொற்று ஏற்பட்டு காது வலி ஏற்படலாம். எனவே, சளி பிடித்திருக்கும்போது குழந்தைகள் காது வலி என்று சொன்னால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதிப்பது அவசியம்.
மேலும், அதிக ஒலி கொண்ட பட்டாசுகளை வெடிப்பது, காது சுத்தம் செய்யும் பட்ஸ்ஸை தவறாக பயன்படுத்துவது, சக குழந்தைகளுடன் சண்டையிடும்போது காதில் அடிபடுவது, அல்லது காதில் கட்டிகள் ஏற்படுவது போன்ற காரணங்களாலும் வலி ஏற்படலாம். பெற்றோர்கள் ஒருபோதும் காது வலிக்கு எண்ணெய் விடுவது போன்ற விஷயங்களை தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் சில நேரங்களில் பழங்களின் கொட்டைகள், சிறிய நாணயங்கள் போன்ற பொருட்களை தவறுதலாக விழுங்கிவிடுவார்கள் அல்லது காது, மூக்கில் போட்டுக் கொள்வார்கள். இது உணவு குழாய் அல்லது மூச்சு குழாயில் அடைப்பை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம். இது போன்ற சமயங்களில் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பது மிக முக்கியம்.