வீதியில் இறங்கி போராடியிருப்பேன்: எடப்பாடிக்கு எதிராக ஆவேசமாக பேசிய ரஜினி

திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (21:17 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்று கூறிய ரஜினிகாந்த் இன்று கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, 'கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் கிடைத்திருக்காவிட்டால் நானே வீதியில் இறங்கி போராடியிருப்பேன்' என்று ஆவேசமாக பேசினார். 
 
அவர் மேலும் பேசியதாவது: மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே வீதியில் இறங்கி போராடியிருப்பேன். பழையவராக இருந்தாலும், புதியவராக இருந்தாலும், கருணாநிதி இல்லாமல் யாராலும் அரசியல் செய்ய முடியாது.
 
அதிமுக ஆண்டு விழாவின்போது எம்ஜிஆர் படத்தை கருணாநிதியின் படத்தின் அருகே வைக்க வேண்டும், ஏனென்றால் அதிமுக உருவாக காரணமாக இருந்தவர் கருணாநிதி. அவருடைய இறுதி சடங்கிற்கு ஒட்டுமொத்த இந்தியாவே வந்திருந்தபோது தமிழக முதல்வர் வரவேண்டாமா?
 
சிவாஜி கணேசனை ஒரே படத்தில் சூப்பர் ஸ்டார் ஆக்கியவர் கருணாநிதி. இருட்டில் இருந்த பல இதிகாச வீரர்களை பாமரர்களிடம் கொண்டு சேர்த்தவர் கருணாநிதி. கருணாநிதி இல்லாத தமிழகத்தை  நினைத்து கூட பார்க்க முடியவில்லை. கருணாநிதியை பின்பற்றி அரசியலுக்கு வந்தவர்கள் லட்சம் பேர்; கருணாநிதியால் தலைவர்களானவர்கள் பல நூறுபேர்.
 
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்