ஜெயலலிதா சிகிச்சை ; சிசிடிவி நிறுத்தப்பட்டது - அப்போலோ பிரதாப் ரெட்டி தகவல்

வியாழன், 22 மார்ச் 2018 (14:21 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிசிடிவி கேமரா பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என அப்போலோ நிறுவன தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

 
உடல் நலக்குறைபாடு காரணமாக 2016ம் ஆண்டு செப்.22ம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.  அந்நிலையில், அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. எனவே, அதுகுறித்து விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ஓய்வு பெற்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. அது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்போலோ நிறுவன தலைவர் பிரதாப் ரெட்டி “ஜெ. சிகிச்சை பெற்றது தொடர்பான சிசிவிடி பதிவுகள் எதுவும் எங்களிடமில்லை. ஏனெனில், சம்பந்தம் இல்லாதவர்கள் பார்க்க நேரிடம் என்பதால் அவர் சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவி கேமரா பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
 
மேலும், ஜெ.வின் தனிமை மற்றும் பாதுகாப்பு கருதி சில நோயாளிகள் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். அதேபோல், ஜெ.வுடன் இருந்தவர்கள் (சசிகலா) கூறிய நபர்கள் மட்டுமே ஜெ.வை சந்திக்க மருத்துவர்கள் அனுமதித்தனர். ஜெ.விற்கு உரிய சிறந்த சிகிச்சையை நாங்கள் அளித்தோம்” என அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்