நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்ததில் இருந்தே பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. காவிரி பிரச்சனைக்காக கர்நாடக மாநிலத்தை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளூம் போராடியபோது கமல் மட்டும் திடீரென கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதேபோல் நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் அதாவது தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் திடீரென காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தார். இந்த சந்திப்பு தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு மட்டுமின்றி திமுகவுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு குஷ்பு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே திமுக-காங்கிரஸ் கூட்டணி முறியும் என்று சில அரசியல் விமர்சகர்கள் கூறி வரும் நிலையில் கமல்-ராகுல்காந்தி சந்திப்பால் புதிய கூட்டணி தமிழகத்தில் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேலும் ஒரு திடீர் திருப்பமாக இன்று காலை 11 மணிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவர்களை டெல்லியில் அவருடைய இல்லத்தில் கமல் சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் தமிழக காங்கிரஸ், திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கமல் போகும் வேகத்தை பார்த்தால் அவர் எதோ பெரிய திட்டத்தை வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். காங்கிரஸ், கமல் கட்சி மற்றும் ஒருசில கட்சிகள் கூட்டணி அமைத்து திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளை எதிர்க்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.