சம்பளப் பிரச்சனை - சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம் உண்ணாவிரதம் !

சனி, 9 பிப்ரவரி 2019 (14:23 IST)
தமிழ் சின்னத்திரை உலகில் பணிபுரியும் உதவி இயக்குனர்களுக்கு முறையான சம்பளம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி நாளைக் காலை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.

தமிழ் சினிமாவை விட தமிழ் தொலைக்காட்சித் தொடர்கள் உலகம் பரபரப்பாக இயங்கி வருகிறது. காரணம் ஒளிப்பரப்பப்படும் தொடர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களைத் தவிர மற்ற நாள்கள் அனைத்திலும் தினசரி தொடர்கள் ஒளிப்பரப்பப்பட்டு வருகின்றன.

அதிகரித்து வரும் தொலைக்காட்சி தொடர்களின் புகழுக்கு ஏற்ப ஓய்வு பெற்ற நடிகர் நடிகைகள் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கல்லாக் கட்டி வருகின்றனர். ஆனால் திரைக்குப் பின்னால் இருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் ஆகியோருக்கு முறையான சம்பளம் தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது.

இதனைக் கண்டித்து அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டுமென சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம் சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நாளைக் காலை 9 மணி முதல் 5 மணி வரை ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்  நடத்த இருக்கின்றனர். இந்த உண்ணாவிரதத்தை நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் துவக்கி வைக்க இருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்