பிச்சைக்காரரை தாக்கிய ஒற்றை காட்டு யானை!

J.Durai
செவ்வாய், 18 ஜூன் 2024 (21:57 IST)
கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் பல கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் முக்கியத் தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. 
 
கடந்த சில மாதங்களாக வனப் பகுதியில் நிலவிய வறட்சி காரணமாக உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு கிராமப் பகுதியிலும் ஒற்றை காட்டு யானை மற்றும் இரண்டு மூன்று காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதை அடுத்து கடந்த 10 நாட்களாக மருதமலை பகுதியில் சுற்றிவரும் ஒற்றைக் காட்டு யானை ஐ.ஓ.பி காலனி, லெப்பரஸ்சி காலனி போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிகின்றது.
 
இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா என்பவரை  அந்த ஒற்றை காட்டு யானை தாக்கியது அதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். 
 
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி அன்று இரவு 3  மணிக்கு அப்பகுதியில்  பிச்சை எடுத்து வந்த சிவசுப்பிரமணியம் என்ற முதியவர் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார் பின்பக்கமாக யானை வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர். ஓடி செல்ல முடியாமல் பயந்து நடுங்கி நின்று கொண்டு உள்ளார்.
 
அவரை யானை தள்ளிவிட்டு காலால் உதைத்து செல்லும் காட்சிகள்  அப்பகுதியில் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.  மேலும் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை வனத்துறையிடம் ஒற்றை   யானை உலா வருவது குறித்து பலமுறை தெரிவித்தும் அவர்கள் அதனை கண்காணிக்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.
 
மேலும் அப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டத்தால் உயிருக்கு ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருவதாகவும், தமிழக அரசும், வனத்துறையும் அப்பகுதி பொதுமக்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்