நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்ட்?- தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை

செவ்வாய், 17 ஏப்ரல் 2018 (17:35 IST)
இம்சை அரசன் பட விவகாரத்தில் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்ட் கொடுப்பது பற்றி தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சிம்புதேவன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’. வடிவேலு ஹீரோவாக நடித்த இந்தப் படத்தை, இயக்குநர் ஷங்கர்  தயாரித்தார். அரசியலை நையாண்டியாகச் சொன்ன இந்தப் படம், மாபெரும் வெற்றி பெற்றது.
 
எனவே, 10 வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகமான ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தை எடுக்கத் திட்டமிட்டனர். சில நாட்கள் ஷூட்டிங் வந்த  வடிவேலு, அதன்பிறகு வரவில்லை. எனவே, இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் புகார் அளித்தார் ஷங்கர்.
 
அந்நிலையில், இது தொடர்பாக நடிகர் சங்கத்துக்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் வடிவேலு. அதில், ஒப்பந்தம் செய்த தேதிகளில் படத்தைத் தொடங்காததால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், மேலும், தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தன்னைப் பற்றி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தாலும் இம்சை அரசன்  படத்தில் நடிக்க முடியாது என தெரிவித்தார்.
 
இதனால் வடிவேலுக்கு ரெட் கார்ட் கொடுப்பது பற்றி  தயாரிப்பாளர் சங்கம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டால் அவரால் எந்த படத்திலும் நடிக்க முடியாது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்