ஆன்லைனில் டிக்கெட் விற்கும் விஷாலின் முடிவுக்கு, சத்யம் தியேட்டர் சம்மதம் சொல்லுமா என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
மொபைல் போனுக்குள் உலகமே அடங்கிவிட்ட இந்தக் காலத்தில், எல்லாவற்றையும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்க பழக்கப்பட்டு விட்டோம். சினிமா டிக்கெட்டையும் சரி, அங்கு நாம் சாப்பிடப் போகும் ஸ்நாக்ஸையும் சரி… முன்கூட்டியே ஆர்டர் செய்து கொள்ளலாம்.
டிக்கெட்டை புக் செய்துகொள்ள டிக்கெட் நியூ, புக் மை ஷோ போன்ற இணையதளங்களும், மொபைல் அப்ளிகேஷன்களும் இருக்கின்றன. இவற்றின் மூலம் புக் செய்யும்போது, ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் எக்ஸ்ட்ராவாக செலுத்த வேண்டும். இது, தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளின் கண்ணை உறுத்தியிருக்கிறது. ‘நம்முடைய படத்தை மக்கள் பார்ப்பதற்கு, இதில் சம்பந்தமே இல்லாத ஒருவருக்கு ஏன் காசு போய்ச் சேரவேண்டும்’ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
எனவே, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இணையதளத்திலேயே டிக்கெட்டை விற்க முடிவு செய்துள்ளனர். இதில், ஒரு டிக்கெட்டுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ராவாக செலுத்தினால் போதும். அதில், 2 ரூபாய் தயாரிப்பாளருக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பிற தியேட்டர்களை ஒருங்கிணைத்து வைத்துள்ள டிக்கெட் நியூ, புக் மை ஷோ இணையதளங்களுக்கு இது மாற்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சென்னையில் நிறைய தியேட்டர்களை வைத்திருக்கக் கூடிய சத்யம், தனக்கென்று சொந்தமாக இணையதளம் வைத்துள்ளது. அதில் மட்டுமே டிக்கெட்டுகளை புக்செய்ய முடியும். அதுவும் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் எக்ஸ்ட்ராவாக வசூலிக்கிறது. எனவே, சத்யம் தியேட்டரின் டிக்கெட்டையும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இணையதளத்தில் விற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விஷாலின் இந்த முடிவுக்கு சத்யம் தியேட்டர் சம்மதம் சொல்லுமா?