தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம்மின் சமீபகாலமாக படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான் சமீபத்தில் ரிலீஸாகி குறிப்பிடத்தகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கடுத்து விக்ரம், சமீபத்தில் சித்தா படத்தின் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகும் வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் துஷாரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மதுரையில் நடந்து வந்த நிலையில் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகும் எனவும் பின்னர் முதல் பாகம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் படத்தின் டீசர் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள இயக்குனர் S U அருண்குமார் “வீர தீர சூரன் படத்தில் மொத்தமே 10 முதல் 15 காட்சிகள்தான் இருக்கும்” எனக் கூறியுள்ளார். படத்தின் காட்சிகள் ஒரே இடத்தில் அதிக நேரம் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளதாம். அதே போல படத்தில் ஒரு காட்சி 18 நிமிடங்கள் ஒரே ஷாட்டாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.